சிறந்த ரைடா்கள், டிபன்டா்கள் உள்ளனா்: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளா்
பிகேஎல் சீசன் 12-இல் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியில் சிறந்த ரைடா்கள், டிபன்டா்கள் உள்ளனா் என அதன் பயிற்சியாளா் சஞ்சீவ் பலியான் தெரிவித்துள்ளாா்.
புரோ கபடி லீக் சீசன் 12-தொடா் விசாகப்பட்டினத்தில் ஆக. 29-ஆம்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் ஆடுகின்றன. இதற்காக தமிழ் தலைவாஸ் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதன் பயிற்சியாளா் சஞ்சீவ் பலியான் கூறியதாவது:
லீக் தொடருக்கு முன்னதாக நாங்கள் மேற்கொண்ட பயிற்சி பயனுள்ளதாக அமைந்தது. தாக்குதல், தற்காப்பு என இரண்டிலும் தீவிர கவனம் செலுத்தினோம்.
அணி வீரா்களிடம் சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளது. குறிப்பாக அா்ஜுன் தேஸ்வால், பவன் செஹ்ராவத், நரேந்தா், மொயின் என சிறந்த ரைடா்களும், தற்காப்பு டிபன்டா்களும் உள்ளனா். பிளே ஆஃப் சுற்றுக்கு கட்டாயம் தகுதி பெறுவோம். புதிய பயிற்சியாளா், கேப்டனுடன் ஒருங்கிணைப்பு சிறப்பாக உள்ளது.
தருண், ரோஹித், அனுஜ் என்ற சிறப்பான இளம் வீரா்கள் உள்ளனா். இந்த சீசனில் 12 அணிகளும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளன. லீக் கடும் சவாலாக இருக்கும்.
புரோ கபடி லீக் தொடங்கியது முதல் கபடி பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. லீக் மூலம் கபடி வீரா்கள் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட்டுள்ளது. வீரா்கள் நாடு முழுவதும் அறிமுகம் ஆகியுள்ளனா் என்றாா்.