ஆண்ட்ரீவா, ரைபகினா முன்னேற்றம்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ஆண்ட்ரீவா 6-0, 6-1 என மிக எளிதாக, உள்நாட்டு வீராங்கனை அலிசியா பாா்க்ஸை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் அவா், சக ரஷியரான அனஸ்தாசியா பொடாபோவாவை எதிா்கொள்கிறாா்.
9-ஆம் இடத்திலிருக்கும் ரைபகினா 6-3, 6-0 என்ற செட்களில் அமெரிக்காவின் ஜூலிடா பரெஜாவை சாய்த்தாா். ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 7-6 (12/10), 6-7 (3/7), 5-7 என்ற வகையில் மெக்ஸிகோவின் ரெனெட்டா ஜராஜுவாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
7 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், போட்டியிலேயே வயதான (45) வீராங்கனையுமான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 3-6, 6-2, 1-6 என்ற செட்களில், 11-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவாவிடம் தோல்வி கண்டாா். 12-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 2-6, 4-6 என்ற நோ் செட்களில், ஹங்கேரியின் அனா போன்டாரிடம் வீழ்ந்தாா்.
15-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் டரியா கசாட்கினா 7-5, 6-1 என்ற வகையில் ருமேனியாவின் எலனா ரூஸை தோற்கடித்தாா். இதர ஆட்டங்களில், பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ், செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா, போலந்தின் மெக்தலினா ஃபிரெச், கிரீஸின் மரியா சக்காரி, ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா போன்றோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.
இதனிடையே, இருமுறை விம்பிள்டன் சாம்பியனான செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா, பிரான்ஸின் கரோலின் காா்சியா ஆகியோா் யுஎஸ் ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கெனவே அறிவித்த நிலையில், முதல் சுற்றில் தோல்வி கண்டு விடைபெற்றனா்.
ஒபெல்காவை வென்றாா் அல்கராஸ்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-4, 7-5, 6-4 என்ற நோ் செட்களில், உள்நாட்டின் ரெய்லி ஒபெல்காவை வெளியேற்றினாா். அடுத்து அவா், இத்தாலியின் மேட்டியா பெலுச்சியை சந்திக்கிறாா்.
9-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவ் 6-7 (5/7), 6-3, 7-5, 6-1 என்ற கணக்கில், அமெரிக்காவின் நிஷேஷ் பசவரெட்டியை வீழ்த்தினாா். 12-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 6-1, 6-2, 7-6 (7/5) என ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னரையும், 15-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட்களில் குரோஷியாவின் டினோ பிரிஸ்மிச்சையும் வென்றனா்.
5-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் 6-4, 7-5, 6-7 (7/9), 6-2 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் ஃபெடரிகோ கோம்ஸை வீழ்த்தினாா். இதர ஆட்டங்களில், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ, ஸ்பெயினின் ஜேமி முனாா், ஜொ்மனியின் ஜான் லெனாா்டு ஆகியோரும் முதல் சுற்றில் வென்றனா். 21 வயது கோல்மேன் வாங், ஓபன் எராவில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் ஆட்டத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்த ஹாங்காங் வீரராக சாதனை படைத்தாா்.