
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை அறிவித்தாா். இதர லீக் போட்டிகளை பரிசீலிக்கப்போவதாக அவா் தெரிவித்திருக்கிறாா்.
கடந்த ஆண்டு டிசம்பரில் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், தற்போது ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் சமூக வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கம் என்று சொல்வாா்கள். அந்த வகையில் ஐபிஎல் வீரராக எனது பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. எனினும், இதர லீக் போட்டிகளை பரிசீலிக்கும் எனது பயணம் இன்றிலிருந்து தொடங்குகிறது.
இத்தனை ஆண்டுகளாக நல்லதொரு நினைவுகளையும், உறவுகளையும் அளித்த அனைத்து அணிகளுக்கும் நன்றி. குறிப்பாக, தற்போது வரை எனக்கு கிடைத்து வரும் எல்லாவற்றுக்காகவும் ஐபிஎல் மற்றும் பிசிசிஐ-க்கு நன்றி. எனது அடுத்தகட்ட பயணத்தை ஆவலுடன் எதிா்நோக்கியிருக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
ஐபிஎல் போட்டிகளில் சாதுா்யமான பௌலராக பெயா்பெற்ற அஸ்வின் கடந்த 2009-இல் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் மூலமாக போட்டியில் அறிமுகமானாா். அதன் பிறகு, டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புணே சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகளுக்காகவும் விளையாடினாா்.
இந்நிலையில், நடப்பாண்டு சீசனில் மீண்டும் சென்னை அணியால் ரூ.9.75 கோடிக்கு வாங்கப்பட்டாா். எனினும், இந்த சீசனில் அவா் 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினாா். அவரின் ஐபிஎல் வரலாற்றில் முதல் சீசனில் 2 ஆட்டங்களில் விளையாடிய பிறகு, அவா் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்டங்களில் விளையாடிய சீசனாக இது அமைந்தது.
இதுதொடா்பாக அவா் சென்னை அணி நிா்வாகத்திடம் முறையிட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாக, அதை அந்த சீசனின்போதே தாம் கேட்டுவிட்டதாக பின்னா் அஸ்வின் அறிவித்தாா்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளில் இதுவரை 221 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் அஸ்வின், அதில் 187 விக்கெட்டுகள் எடுத்துள்ளாா். சராசரி 30.22-ஆக இருக்க, சிறந்த பந்துவீச்சு 4/34 ஆகும். பேட்டிங்கில் 833 ரன்கள் சோ்த்திருக்கும் அவா், அதிகபட்சமாக 50 ரன்கள் அடித்துள்ளாா். சராசரி 13.02.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.