
2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை அதற்கு ஒப்புதல் வழங்கியது. போட்டிகளை நடத்துவதற்கான சிறந்த நகரமாக, அகமதாபாதையும் அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான விருப்பக் கடிதத்தை இந்தியா கடந்த மாா்ச் மாதம் சமா்ப்பித்த நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் அண்மையில் அதற்கு ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடா்ந்து தற்போது மத்திய அமைச்சரவையும் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
இதுதொடா்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கான ஏலத்தில் பங்கேற்கும் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
ஒருவேளை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும் நிலையில், அதற்கான நிதியுதவியை குஜராத் அரசுக்கு வழங்குவது, உரிய அமைச்சகங்கள் மற்றும் துறைகள், அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாதக் கடிதம் பெறுவது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன பயிற்சி வசதிகளுடன் விளையாட்டு கலாசாரம் கொண்ட அகமதாபாத் நகரம், காமன்வெல்த் போட்டிகளை நடத்த சிறந்த தோ்வாக இருக்கும். உலகிலேயே மிகப்பெரியதான நரேந்திர மோடி மைதானத்தில், 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதே அதற்கான உதாரணம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கான ஏலத்தில் பங்கேற்கும் விண்ணப்ப நடைமுறைகளை நிறைவு செய்ய, வரும் 31-ஆம் தேதியே கடைசி நாளாகும். கிளாஸ்கோவில் நவம்பா் மாதம் கூடும் காமன்வெல்த் விளையாட்டு பொதுச் சபை, 2030-ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பை எந்த நாட்டுக்கு வழங்குவது என்பதை இறுதி செய்யும். நிதிச் சிக்கலை காரணமாகக் கூறி ஏலத்துக்கான போட்டியிலிருந்து கனடா விலகியதால், போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், அதற்கான ஒரு முன்னோட்டமாக இந்தப் போட்டி இந்தியாவுக்கு உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடைசியாக இந்தியா, 2010-இல் தில்லியில் காமன்வெல்த் போட்டிகளை நடத்தியது. அதற்காக ரூ.1,600 கோடி பட்ஜெட் திட்டமிடப்பட்ட நிலையில், பல மடங்கு அதிகமாக ரூ.70,000 கோடியை இந்தியா அதற்காக செலவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.