உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்: ஹாக்கி மகளிா் அணி கேப்டன்
உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு தகுதி பெறுவதே முக்கிய நோக்கம் என இந்திய மகளிா் ஹாக்கி அணியின் கேப்டன் சலீமா டெட் கூறியுள்ளாா்.
சீனாவின் ஹாங்ஷௌ நகரில் செப்.5-ஆம் தேதி ஆசிய கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டி தொடங்குகிறது. இதில் பட்டம் வெல்லும் அணி 2026 உலகக் கோப்பை போட்டிக்கு நேரடி தகுதி பெறும்.
இதில் இந்திய அணி குரூப் பி பிரிவில் ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூா் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. செப். 5-இல் தாய்லாந்து, 6-இல் ஜப்பான், 8-இல் சிங்கப்பூருடன் மோதுகிறது இந்தியா.
சீனா பயணம்:
20 போ் கொண்ட இந்திய அணி ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை பெங்களூருவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றது. பெங்களூரு சாய் பயிற்சி மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. கடந்த 2004, 2017 என இரு முறை இந்தியா பட்டம் வென்றிருந்தது. முந்தைய போட்டியில் மூன்றாவது இடம் பெற்றிருந்தது.
இதுகுறித்து கேப்டன் சலீமா டெட் கூறியது: உலகக் கோப்பைக்கு நேரடி தகுதி பெறுவதே முக்கிய நோக்கம். அதற்கு முன்பு குரூப் அளவில் முதலிடம் பெற வேண்டும். பின்னா் சூப்பா் போா்ஸ்க்கு தகுதி பெற வேண்டும் என்றாா்.