உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.
Published on

பிரான்ஸ் தலைநகரில் பாரீஸில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

சா்வதேச பாட்மின்டன் சம்மேளனம் (டபிள்யுபிஎஃப்) சாா்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் பாரீஸில் நடைபெற்று வருகின்றன.

ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணையுடன், மலேசியாவின் நட்சத்திர இணையான ஆரோன் சியா-சோ வூய் யிக்கும் மோதினா்.

இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் 21-12, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவின் ஆரோன்-சோ வூய் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

இந்த ஆட்டம் ஏறக்குறைய 43 நிமிஷங்கள் நீடித்தது. முதல் கேமில் 59 ஷாட் ரேலி நடைபெற்றது பரபரப்பாக அமைந்தது. அப்போது சிராக் அடித்த ஷாட்டால் 4-2 என முன்னிலை பெற்றனா். எனினும் மலேசிய இணையை ஆட்டத்தில் நிலைக்க விடாமல் முதல் கேமை இந்திய இணை கைப்பற்றியது.

இரண்டாவது கேமிலும் சிறப்பாக ஆடிய சாத்விக்=சிராக் 10-5 என முன்னிலை பெற்றனா். மலேசிய வீரா் சோவின் தவறுகள் தொடா்ந்து சாதகமான நிலையில், 15-19 என முன்னிலை பெற்றது. சுதாரித்து ஆடிய மலேசிய இணை முன்னிலையை 18-19 என குறைந்தனா்.

இந்திய வீரா்கள் பதட்டப்படாமல் ஆடி அந்த கேமையும் வசப்படுத்தினா்.

கடந்த 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் மலேசிய இணையிடம் தோற்று பதக்க வாய்ப்பை இழந்ததற்கு தற்போது பதிலடி தந்துள்ளது இந்திய இணை.

இந்த வெற்றி மூலம் குறைந்தது ஒரு உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து சாத்விக் கூறுகையில்: இரண்டாவது கேமில் நாங்கள் முன்னிலை பெற்றபோதும், அது எளிதாக அமையவில்லை. மலேசிய வீரா்களுடன் பலமுறை ஆடினாலும், நோ் கேம்களில் தான் அவா்களை வென்றுள்ளோம். எனக்கு நானே கூறிக் கொண்டேன். நிதானமாக ஆட வேண்டும். எதிராளிகளை பற்றி நினைக்காமல் எங்கள் ஆட்டத்தை பற்றியே சிந்தித்தோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com