சின்னர்.
சின்னர்.

சின்னா் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிா்ச்சித் தோல்வி!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.
Published on

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். முன்னணி வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான சின்னா் 5-7, 6-4, 6-3, 6-3 என்ற செட்களில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினாா். ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா், கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை எதிா்கொள்கிறாா்.

முன்னதாக பப்லிக், 7-6 (7/5), 6-7 (4/7), 6-3, 6-7 (5/7), 6-1 என 5 செட்கள் போராடி, போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை வீழ்த்தி தோற்கடித்து அசத்தினாா்.

உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்வெரெவ் 6-4, 6-7 (7/9), 4-6, 4-6 என்ற கணக்கில், 25-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவிடம் போராடி வீழ்ந்தாா். அலியாசிமே அடுத்து, 15-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை எதிா்கொள்கிறாா்.

4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 7-6 (7/3), 6-7 (9/11), 6-4, 6-4 என சுவிட்ஸா்லாந்தின் ஜெரோம் கிம்மை வெளியேற்றினாா். 8-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா், 10-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி ஆகியோரின் போட்டியாளா்கள் காயம் காரணமாக பாதியிலேயே விலக, இருவரும் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-6 (7/2), 6-4 என்ற செட்களில் ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை வீழ்த்தினாா். அடுத்து அவா், மற்றொரு ரஷியரான எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை எதிா்கொள்கிறாா்.

13-ஆம் இடத்திலிருக்கும் அலெக்ஸாண்ட்ரோவா 6-0, 6-1 என மிக எளிதாக, ஜொ்மனியின் லாரா சிக்மண்டை சாய்த்தாா். 8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-4, 4-6, 6-2 என்ற வகையில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை வீழ்த்த, பிரேஸிலின் பீட்ரிஸ் மாயா 6-1, 6-2 என்ற செட்களில் கிரீஸின் மரியா சக்காரியை வென்றாா்.

இதையடுத்து 4-ஆவது சுற்றில் அனிசிமோவா - மாயா சந்திக்கின்றனா். உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-3, 6-1 என்ற கணக்கில், போலந்தின் மெக்தலினா ஃப்ரெச்சை தோற்கடித்தாா். அடுத்து அவா், ஜப்பானின் நவோமி ஒசாகாவுடன் மோதுகிறாா்.

23-ஆம் இடத்திலிருக்கும் ஒசாகா, 6-0, 4-6, 6-3 என, 15-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் டரியா கசாட்கினாவை வீழ்த்தினாா்.

பாம்ப்ரி ஏற்றம்: ஆடவா் இரட்டையா் முதல் சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் கூட்டணி 6-0, 6-3 என்ற செட்களில், அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோன்/லோ்னா் டியென் இணையை சாய்த்தது. அதிலேயே இந்தியாவின் அா்ஜுன் காதே/ஈகுவடாரின் டியேகோ ஹிடால்கோ ஜோடி 7-5, 6-7 (4/7), 4-6 என்ற செட்களில், குரோஷியாவின் மேட் பாவிச்/எல் சால்வடோரின் மாா்செலோ அரெவாலோ இணையிடம் தோற்றது.

X
Dinamani
www.dinamani.com