கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்: ஜேக்கப் டஃபி வேகத்தில் சுருண்டது மே.தீவுகள்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 167 ரன்களுக்கு புதன்கிழமை ஆட்டமிழந்தது.
கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்: ஜேக்கப் டஃபி வேகத்தில் சுருண்டது மே.தீவுகள்
Updated on
1 min read

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 167 ரன்களுக்கு புதன்கிழமை ஆட்டமிழந்தது.

ஷாய் ஹோப், தேஜ்நாராயண் சந்தர்பால் மட்டும் அரைசதம் கடந்து ரன்கள் சேர்க்க, நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி அபாரமாக பெளலிங் செய்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

கிறைஸ்ட்சர்ச்சில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆவது நாளில் மூன்றே பந்துகளில் ஜாக் ஃபோக்ஸ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால் நியூஸிலாந்து இன்னிங்ஸ் 70.3 ஓவர்களில் 231 ரன்களுக்கே முடிவுக்கு வந்தது. டஃபி 4 ரன்களுடன் கடைசி வீரராக நின்றார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமர் ரோச், ஜேடன் சீல்ஸ், ஓஜே ஷீல்ட்ஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2, ஜோஹான் லேன், ராஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் தனது இன்னிங்ஸை தொடங்க, ஜான் கேம்ப்பெல் 1, அலிக் அதானஸி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தேஜ்நாராயண் சந்தர்பால் - ஷாய் ஹோப் 2-ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். ஹோப் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு விடைபெற, தொடர்ந்து வந்த கேப்டன் ராஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் டக் அவுட்டாகினர்.

இந்நிலையில் சந்தர்பாலும் 3 பவுண்டரிகளுடன் 52 ரன்களுக்கு விடைபெற, டெவின் இம்லாச் 14, ஜோஹான் லேன் 0, ஜேடன் சீல்ஸ் 2, ஓஜே ஷீல்ட்ஸ் 0 ரன்களுடன் விரைவாக வெளியேறினர்.

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டம் 75.4 ஓவர்களில் 167 ரன்களுக்கு நிறைவடைந்தது. கெமர் ரோச் 10 ரன்களுடன் கடைசி வீரராக நின்றார். நியூஸிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 5, மேத்யூ ஹென்றி 3, ஜாக் ஃபோக்ஸ் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

பின்னர், 64 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, புதன்கிழமை ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com