

ராய்பூர்: இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் சேர்க்க, தென்னாப்பிரிக்கா 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய இன்னிங்ஸில் விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசியும், கேப்டன் கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தும் ஸ்கோரை பலப்படுத்தினர். எனினும், இந்திய பெளலர்கள் தென்னாப்பிரிக்க பேட்டர்களை இந்த முறையும் கட்டுப்படுத்தத் தவறினர்.
எய்டன் மார்க்ரம் அபாரமாக சதமடித்து வெற்றிக்கு அடித்தளமிட, மிடில் ஆர்டரில் வந்த கேப்டன் டெம்பா பவுமா, மேத்யூ பிரீட்ஸ்கி, டெவால்ட் பிரெவிஸ் ஆகியோர் அசத்தலான ஆட்டத்துடன் அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சை தேர்வு செய்தது. பிளேயிங் லெவனில் இந்திய தரப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் ரயான் ரிக்கெல்டன், ஆட்னீல் பார்ட்மேன், பிரெனலென் சுப்ராயன் ஆகியோருக்கு பதிலாக, டெம்பா பவுமா, லுங்கி இங்கிடி, கேசவ் மஹராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22, ரோஹித் சர்மா 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு விடைபெற்றனர். 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி, விக்கெட் சரிவைத் தடுத்து, ஸ்கோரை பலப்படுத்தியது.
ருதுராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். 195 ரன்கள் சேர்த்த கோலி - கெய்க்வாட் பார்ட்னர்ஷிப்பை, மார்கோ யான்சென் 36-ஆவது ஓவரில் பிரித்தார். 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 105 ரன்களுக்கு ருதுராஜ் வெளியேறினார்.
தொடர்ந்து கேப்டன் கே.எல்.ராகுல் வர, விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 53-ஆவது சதத்தை எட்டினார். அவர் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 102 ரன்களுக்கு கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னுக்கு வீழ, ராகுலுடன் இணைந்தார் ஜடேஜா.
ராகுல் அதிரடியாக அரைசதம் கடந்தார். ஓவர்கள் முடிவில் ராகுல் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 66, ஜடேஜா 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் மார்கோ யான்சென் 2, நாண்ட்ரே பர்கர், லுங்கி இங்கிடி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் 359 ரன்களை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், குவின்டன் டி காக் 8 ரன்களுக்கு வீழ, தொடக்க வீரர் எய்டன் மார்க்ரமுடன் இணைந்தார் கேப்டன் டெம்பா பவுமா. இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்து ஸ்கோரை பலப்படுத்தியது.
அரை சதத்தை நெருங்கிய பவுமா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மேத்யூ பிரீட்ஸ்கி, மார்க்ரமுக்கு கைகொடுக்க, ஒருநாள் கிரிக்கெட்டில் 4-ஆவது சதத்தை தொட்டார் மார்க்ரம். பிரீட்ஸ்கியுடனான அவரின் 3-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 70 ரன்கள் கிடைத்தது.
இந்நிலையில் மார்க்ரம், 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 110 ரன்களுக்கு வீழ்ந்தார். 5-ஆவது பேட்டராக வந்த டெவால்ட் பிரெவிஸ் அதிரடியாக ரன்கள் சேர்க்க, தென்னாப்பிரிக்கா ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது.
4-ஆவது விக்கெட்டுக்கு பிரீட்ஸ்கி - பிரெவிஸ் இணை 92 ரன்கள் சேர்த்தது. இதில் பிரெவிஸ் 1 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிரீட்ஸ்கி 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களுக்கு விடைபெற்றார்.
பின்னர் வந்தோரில் மார்கோ யான்சென் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, டோனி டி ஜோர்ஸி 17 ரன்களுக்கு 'ரிட்டையர்டு ஹர்ட்' ஆனார். முடிவில், கார்பின் பாஷ் 4 பவுண்டரிகளுடன் 29, கேசவ் மஹராஜ் 10 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.