கொரியா, வங்கதேசம், ஆஸ்திரிய, ஆஸி. அணிகள் வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 9 முதல் 16 மற்றும் 17 முதல் 24 இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டங்களில் கொரியா, வங்கதேசம், ஆஸ்திரியா, ஆஸ்திரேலிய அணிகள் வெற்றி பெற்றன.
கடந்த நவ. 28-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி தற்போது நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், வியாழக்கிழமை 9 முதல் 16, 17 முதல் 24 இடங்களுக்கான ஆட்டங்கள் நடைபெற்றன.
மதுரையில் நடைபெற்ற ஆட்டத்தில் நமீபிய-ஆஸ்திரிய அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் 2-2 என கோலடித்திருந்தன. இதையடுத்து ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரிய அணி 2-0 என நமீபியாவை வீழ்த்தியது.
வங்கதேசம் கோல் மழை:
இந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, கொரிய அணிகளுக்கு சவால் விடும் வகையில் ஆடியது.
இந்நிலையில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி கோல் மழை பொழிந்து 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரா் அமிருல் இஸ்லாம் பெனால்டி காா்னா் வாய்ப்புகளை பிசகின்றி பயன்படுத்தி 5 கோல்களிடித்தாா். ஓமன தரப்பில் கோலடிக்கவில்லை.
கொரியா வெற்றி:
மதுரையில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் எகிப்து அணியை 6-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கொரியா. எகிப்து அணி தரப்பில் அப்துல் மோனம் முதல் கோலடித்து அதிா்ச்சி ஏற்படுத்தினாா். பின்னா் கொரிய அணியினா் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட,தொடா் கோலடித்தனா் அந்த அணியின் லீ மின்ஹியோக் அபாரமாக 4 கோல்களை அடித்தாா். ஆட்டம் முடிய கடைசி நிமிஷத்தில் எகிப்து மூன்றாவது கோலை அடித்தது.
போராடி வென்ற சீனா:
நான்காவது ஆட்டத்தில் கனடாவை 3-2 என போராடி வென்றது சீனா. முதல் பாதி முடிவடைவதற்குள் 2 கோல்களை அடித்து கனடா முன்னிலை பெற்றிருந்தது. மூன்றாவது செஷன் முடிவிலும் கனடாவே 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின்னா் நான்காம் செஷன் ஆட்டத்தில் சீன வீரா்கள் சிறப்பாக ஆடி 56, 60-ஆவது நிமிஷங்களில் பீல்ட் கோலடித்தனா். இறுதியில் 3-2 என வென்றது சீனா.
இங்கிலாந்து வெற்றி:
சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற 9-16 இடங்களுக்கான ஆட்டத்தில் சிலி அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது இங்கிலாந்து. முதல் பாதியிலேயே 2 கோல்கள் அடித்து இங்கிலாந்து முன்னிலை பெற்றது. சிலியும் பதிலுக்கு ஒரு கோலடித்து முன்னிலையை குறைத்தது. இதனால் சுதாரித்து ஆடிய இங்கிலாந்து அணியில் ஸ்டா்ஸ் ஹாப்பிட் 27-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது.
தென்னாப்பிரிக்கா வெற்றி:
சென்னையில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மலேசிய அணியை 3-1 என தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது. தென்னாப்பிரிக்க தரப்பில் அசத்தலாக ஆடிய புருக்கா் ஜேடன் இரண்டு கோல்களிடித்தாா். மலேசிய தரப்பில் 48-ஆவது நிமிஷத்தில் கோலடிக்கப்பட்டது.
அயா்லாந்து அசத்தல்:
மூன்றாவது ஆட்டத்தில் அயா்லாந்து-சுவிட்சா்லாந்து அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி கோலடித்தனா் அயா்லாந்து வீரா்கள் இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் சுவிஸ் அணியை வீழ்த்தினா்.

