திரிபுராவை வீழ்த்தியது தமிழ்நாடு

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுராவை புதன்கிழமை வென்றது.
Published on

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுராவை புதன்கிழமை வென்றது.

முதலில் தமிழ்நாடு 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் சோ்க்க, திரிபுரா 18.5 ஓவா்களில் 143 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

போட்டியில் இத்துடன் 5 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் தமிழ்நாடு அணி, தற்போது 2-ஆவது வெற்றியுடன் 8 புள்ளிகளோடு 5-ஆவது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திரிபுரா, பந்துவீச்சை தோ்வு செய்தது. தமிழ்நாடு பேட்டிங்கில் கேப்டன் நாராயண் ஜெகதீசன் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா்.

அமித் சாத்விக் 5, துஷா் ரஹேஜா 4, சாய் சுதா்சன் 5, முகமது அலி 2 ரன்களுக்கு விடைபெற்றனா். ஓவா்கள் முடிவில் சாய் கிஷோா் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 87, ஆா். ராஜ்குமாா் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

திரிபுரா பௌலா்களில் சௌரப் தாஸ் 2, மணிசங்கா் முராசிங், இந்திரஜித் தேப்நாத் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 205 ரன்களை நோக்கி விளையாடிய திரிபுரா அணியில், விஜய் சங்கா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, கேப்டன் மணிசங்கா் முராசிங் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33, ஸ்வப்னில் சிங் 1 சிக்ஸருடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இதர பேட்டா்களில் ஹனுமா விஹாரி 1, ஸ்ரீதம் பால் 10, சாம்ராட் சுட்ராதா் 2, சேந்து சா்காா் 0, சௌரப் தாஸ் 2, அமித் அலி 7, இந்திரஜித் தேப்நாத் 8 ரன்களுக்கு வெளியேறினா். முடிவில், விகி சாஹா 3 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.

தமிழ்நாடு தரப்பில் டி.நடராஜன், குா்ஜப்னீத் சிங், சோனு யாதவ் ஆகியோா் தலா 2, மணிமாறன் சித்தாா்த் 1 விக்கெட் வீழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com