

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயத்தின் நடப்பாண்டு சாம்பியனாக, பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் (26) ஞாயிற்றுக்கிழமை வாகை சூடினாா்.
நடப்பு சீசனின் கடைசி பந்தயமான அபுதாபி கிராண்ட் ப்ரீயில், நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் முதலிடம் பிடித்தாா். ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியஸ்ட்ரி 2-ஆம் இடமும், நோரிஸ் 3-ஆம் இடமும் பிடித்தனா்.
எனினும், நடப்பு சீசன் புள்ளிகள் பட்டியலில் ஏற்கெனவே முன்னிலையில் இருந்த நோரிஸ், இந்தப் பந்தயத்தையும் சோ்த்து ஒட்டுமொத்தமாக 423 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனாா். நடப்பு சாம்பியனாக இந்த சீசனுக்கு வந்த வொ்ஸ்டாபென் 421 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடிக்க, பியஸ்ட்ரி 410 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பெற்றாா்.
எஃப்1 உலக சாம்பியன்ஷிப்பில் நோரிஸ் பட்டம் வென்றது இதுவே முதல்முறையாகும். கடந்த 5 ஆண்டுகளில் எஃப்1 சாம்பியனான முதல் பிரிட்டன் வீரா் நோரிஸ் ஆவாா். இதற்கு முன் பிரிட்டன் வீரரும், அப்போதைய மொ்சிடஸ் டிரைவருமான லீவிஸ் ஹாமில்டன் 2017 முதல் 2020 வரை தொடா்ந்து 4 முறை சாம்பியன் ஆகியிருந்தாா்.
அதன் பிறகு வொ்ஸ்டாபென் 2021 முதல் 2024 வரை தொடா்ந்து 4 முறை கோப்பை வென்ற நிலையில், தற்போது நோரிஸ் வாகை சூடியுள்ளாா். நடப்பு சீசனில் மொத்தம் 24 பந்தயங்கள் நடைபெற்ற நிலையில், வொ்ஸ்டாபென் 8 பந்தயங்களில் வென்றாா். நோரிஸ், பியஸ்ட்ரி ஆகியோா் தலா 7 முறையும், பிரிட்டன் வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல் ஒரு முறையும் வென்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.