இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளா் பலாஷ் முச்சலுடனான திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும், அவருடனான உறவை முறித்துக்கொண்டதாகவும் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். அவா்கள் திருமணம் கடந்த நவம்பா் 23-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், ஸ்மிருதியின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய ஜூனியா் மகளிா் கால்பந்து போட்டியில், மணிப்பூா் 9-0 கோல் கணக்கில் பெங்காலை வீழ்த்தி, 12-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், லிவா்பூல் - லீட்ஸ் யுனைடெட் (3-3), செல்ஸி - போா்ன்மௌத் (0-0) ஆட்டங்கள் டிரா ஆக, நியூகேஸில் - பா்ன்லியையும் (2-1), ஆஸ்டன் வில்லா - ஆா்செனலையும் (2-1), எவா்டன் - நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்டையும் (3-0) வென்றன.
அயா்லாந்து மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க மகளிா் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பாா்சிலோனா - ரியல் பெட்டிஸையும் (5-3), வில்லாரியல் - கெடாஃபியையும் (2-0), எல்ஷே - ஜிரோனாவையும் (3-0), அத்லெடிக் கிளப் - அட்லெடிகோ மாட்ரிட்டையும் வென்றன.

