எலும்பு முறிந்த கையோடு எனக்காக பேட் செய்த குர்சரண் சிங்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி
இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாம் சதமடிப்பதற்கு உதவுவதற்காக, சக வீரர் குர்சரண் சிங் எலும்பு முறிந்த கையோடு பேட் செய்ய வந்ததாக இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இரானி கோப்பை போட்டியானது, ரஞ்சி கோப்பை போட்டியின் நடப்பு சாம்பியனுக்கும், இதர மாநில அணிகளின் வீரர்கள் அடங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் நடைபெறும்.
1989-ஆம் ஆண்டு இந்த இரானி கோப்பை போட்டியில், அப்போதைய ரஞ்சி கோப்பை சாம்பியனான தில்லியும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதின. இதில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா வெற்றிக்கு 555 ரன்கள் என்ற இமாலய இலக்கை தில்லி நிர்ணயித்தது. ஆனால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 245 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
இந்நிலையில், அந்த ஆட்டத்தில் ஏற்பட்ட சுவாரஸ்மான நிகழ்வு குறித்து மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சச்சின் பேசியதாவது:
இரானி கோப்பை போட்டி, இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான சோதனை ஆட்டமாக இருந்தது. நான் அங்கம் வகித்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா, 209 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்தது. நான் 90 ரன்களைக் கடந்து சதத்தை நெருங்கியிருந்தேன்.
அணியின் கடைசி வீரராக இருந்த குர்சரண் சிங், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு களம் காண முடியாத நிலையில் இருந்தார். அப்போது, தேர்வுக் குழு தலைவர் ராஜ் சிங் துங்கார்பூர் கேட்டுக் கொண்டதன் பேரில், எனக்கு உதவும் வகையில் குர்சரண் சிங் பேட் செய்ய வந்தார். நானும் சதம் கடந்தேன்.
அந்த ஆட்டத்துக்குப் பிறகு நான் இந்திய அணிக்கு தேர்வானேன். பின்வந்த நாள்களில் குர்சரண் சிங்கும் இந்திய அணியில் இடம் பிடித்தார். அந்த ஆட்டத்துக்குப் பிறகு மைதானத்திலும், டிரெஸ்ஸிங் ரூமிலும் அவரிடம் நான் எனது கனிவான நன்றிகளைத் தெரிவித்தேன். ஏனெனில், உடைந்த கையுடன் பேட் செய்ய முடியாத நிலையில் இருந்த அவர், எனக்காக களமிறங்கியது மிகப் பெரிய விஷயம்.
நான் சதம் அடித்தேனா இல்லையா என்பதை விட, அப்படி ஒரு நிலையில் அவர் விளையாட முடிவு செய்தது என்னை மிகவும் நெகிழச் செய்தது என்று சச்சின் பேசினார்.
இந்திய அணிக்காக குர்சரண் சிங் தலா ஒரு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

