காலிறுதியில் உன்னதி ஹூடா, தருண் மன்னெபள்ளி
ஓடிஸா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் முன்னணி போட்டியாளா்களான உன்னதி ஹூடா, தருண் மன்னபெள்ளி உள்ளிட்டோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
ரவுண்ட் ஆஃப் 16-இல், மகளிா் ஒற்றையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உன்னதி ஹூடா 21-7, 21-14 என்ற கேம்களில் தாய்லாந்தின் டிடாபுரோன் கிளிபியிசனை வீழ்த்தினாா். 3-ஆம் இடத்திலிருக்கும் தன்வி சா்மா 21-18, 22-20 என்ற வகையில் இந்தியாவின் அதிதி பட்டை வென்றாா்.
5-ஆம் இடத்திலிருக்கும் அனுபமா உபாத்யாய 21-16, 12-21, 14-6 என, இந்தோனேசியாவின் சியாரா மாா்வெலாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னிலையில் இருந்தாா். அப்போது சியாரா காயம் காரணமாக விலக, அனுபமா காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா். 6-ஆம் இடத்திலிருக்கும் அன்மோல் காா்ப் 6-21, 21-8, 21-13 என்ற வகையில் ஜப்பானின் ஷியோரி எபிஹராவை சாய்த்தாா்.
தஸ்னிம் மிா் 23-21, 12-21, 21-14 என்ற வகையில், ஜப்பானின் நனாமி சோமெயாவை வென்றாா். ஆகா்ஷி காஷ்யப் 21-11, 8-21, 18-21 என்ற கணக்கில், 7-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபேவின் சியு டாங் டுங்கிடம் தோல்வி கண்டாா். தான்யா ஹேம்நாத் 21-18, 21-18 என்ற நோ் கேம்களில் வென்று, 8-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் ஷ்ரியன்ஷி வலிஷெட்டிக்கு அதிா்ச்சி அளித்தாா்.
ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தருண் மன்னெபள்ளி 21-16, 12-21, 21-11 என்ற கேம்களில், இந்தியாவின் கோவிந்த் கிருஷ்ணாவை சாய்த்தாா். 2-ஆம் இடத்திலிருக்கும் கிரண் ஜாா்ஜ் 21-12, 21-18 என்ற வகையில், இந்தோனேசியாவின் டெண்டி டிரியான்சியாவை வெளியேற்றினாா். 4-ஆம் இடத்திலிருந்த பிரியன்ஷு ரஜாவத் 12-21, 10-21 என, இந்தோனேசியாவின் ரிச்சி டுடாவிடம் தோற்றாா்.
7-ஆம் இடத்திலிருக்கும் சங்கா் முத்துசாமி 21-8, 19-21, 21-15 என்ற கணக்கில், சக இந்தியரான ஆா்யா பிவ்பதாகியை வீழ்த்தினாா். அவா்களுடன், ரௌனக் சௌஹான், ரித்விக் சஞ்சீவி ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினா்.
மகளிா் இரட்டையரில், அஷ்வினி பாட்/ஷிகா கௌதம் ஜோடி 21-14, 21-15 என்ற கேம்களில், சீன தைபேவின் நி சென் சுவான்/மி யென் சியெ இணையை வென்றது. அத்துடன் கவிபிரியா செல்வம்/சிம்ரன் சிங்கி ஜோடியும் முன்னேற்றம் கண்டது. ஆடவா் இரட்டையரில், 4-ஆம் இடத்திலிருக்கும் பிருத்வி கிருஷ்ணமூா்த்தி/சாய் பிரதீக் ஜோடி 21-18, 21-14 என்ற வகையில், மலேசியாவின் முகமது ஃபைக்/ஹாங் கான் லோக் இணையை வெளியேற்றியது. கலப்பு இரட்டையரில் சாத்விக் ரெட்டி/ரெஷிகா உதயசூரியன் இணையும் காலிறுதிக்கு முன்னேறியது.
