

சிலியில் நடைபெறும் 11-ஆவது ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 10-ஆம் இடம் பிடித்து வெள்ளிக்கிழமை நிறைவு செய்தது.
காலிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய அணி, 9-ஆம் இடத்துக்கான பிளே ஆஃப் மோதல்களில் முதலில் வேல்ஸையும், பின்னா் உருகுவேயையும் வீழ்த்தியிருந்தது. கடைசி ஆட்டத்தில் ஸ்பெயினை சந்தித்த நிலையில், 1-2 கோல் கணக்கில் தோல்வி கண்டு 10-ஆம் இடம் பிடித்தது.
இந்திய நேரப்படி, வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஸ்பெயின் அணிக்காக நடாலியா விலானோவா 16-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். இந்தியாவுக்கு கோல் முயற்சிகள் கைகூடாததால், ஸ்பெயின் 1-0 முன்னிலையுடன் முதல் பாதியை நிறைவு செய்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியிலும் 36-ஆவது நிமிஷத்தில் எஸ்தா் கேனல்ஸ் அடித்த கோலால், ஸ்பெயின் தனது முன்னிலையை 2-0 என அதிகரித்துக் கொண்டது. இந்நிலையில் இந்தியாவுக்கான ஆறுதலாக கனிகா சிவச் 41-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதனால் உத்வேகம் கண்ட இந்திய அணி, அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளுக்கு முயற்சித்தது.
எனினும், ஸ்பெயின் அதற்கு இடம் தராமல் இந்தியாவின் முயற்சிகளை முறியடித்து, இறுதியில் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், சாம்பியன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் நெதா்லாந்து - ஆா்ஜென்டீனா அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன. 3-ஆவது இடத்துக்காக பெல்ஜியம் - சீனா மோதும் ஆட்டமும் அதே நாளில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.