

ஹைதராபாத்: இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள ஆர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனெல் மெஸ்ஸியும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் இன்று(டிச. 13) சந்தித்துப் பேசிக் கொண்டனர்.
முன்னதாக, இன்று(டிச. 13) காலை கொல்கத்தாவில் நடைபெற்ற ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மாலையில் ஹைதராபாத் நகரைச் சென்றடைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஹைதராபாத் நகரிலுள்ள ’தாஜ் ஃபலக்னுமா பேலஸ்’ நட்சத்திர விடுதியில் மெஸ்ஸியும் ரேவந்த் ரெட்டியும் சந்தித்து பேசிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் மெஸ்சி கை குலுக்கும் புகைப்படங்களும், காணொலி காட்சிகளும் சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இந்தச் சந்திப்பின்போது, மேற்கண்ட இருவரும் கேஷுவல் ரக ஆடைகளை உடுத்தியிருந்தது இருவருக்குமிடையேயான ஒற்றுமையை வெளிக்காட்டுவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் நகரிலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச (ஆர்ஜிஐ) கிரிக்கெட் விளையாட்டுத் திடலில் இரவு 7.50 மணிக்கு தொடங்கும் கால்பந்து ஆட்டத்தில் மெஸ்ஸி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ஹைதராபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று பகல் கொல்கத்தாவில் மெஸ்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதம் போன்று ஹைதராபாத்திலும் நிகழாமலிருப்பதில் காவல்துறை உறுதியாக உள்ளது. இதையடுத்து, மெஸ்ஸியைப் பார்க்கும் ஆவலில் விளையாட்டுத் திடலில் திரண்டுள்ள ரசிகர்கள் எல்லை மீறி நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று ஹைதராபாத் காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க: சால்ட் லேக் திடல் வன்முறை: டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்படும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.