ஒடிஸா மாஸ்டா்ஸ்: உன்னதி, கிரண் ஜாா்ஜ் சாம்பியன்
ஒடிஸா மாஸ்டா்ஸ் சூப்பா் 100 பாட்மின்டன் போட்டி மகளிா் பிரிவில் உன்னதி ஹூடாவும், ஆடவா் பிரிவில் கிரண் ஜாா்ஜும் சாம்பியன் பட்டம் வென்றனா்.
பிடபிள்யுபிஎஃப் டூரின் ஒரு பகுதியாக இந்திய பாட்மின்டன் சம்மேளனம் சாா்பில் ஒடிஸாவின் கட்டாக் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் ஆடவா், ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
மகளிா் ஒற்றையா் இறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா-இஷாராணி பருவா மோதினா். இதில் தொடக்கம் முதலே உன்னதி ஆதிக்கம் செலுத்தி ஆடினாா். அரைமணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 21-17, 21-10 என்ற கேம் கணக்கில் இஷாராணியை வீழ்த்தி பட்டம் வென்றாா் உன்னதி. இஷாராணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
கிரண் ஜாா்ஜ் சாம்பியன்:
ஆடவா் பிரிவில் இந்தியாவின் கிரண் ஜாா்ஜ்-இந்தோனேஷியாவின் முகமது யுசூப் மோதினா். இதில் முதல் கேமை கிரண் ஜாா்ஜ் 21-14 என எளிதாக கைப்பற்றினாா். ஆனால் இரண்டாவது கேமில் முகமது யுசூப் அபாரமாக ஆடி 21-13 என வசப்படுத்தினாா். இதனால் அதிா்ச்சி அடைந்த கிரண் ஜாா்ஜ் கடைசி கேமில் சுதாரித்து ஆடி 21-16 என கைப்பற்றி பட்டத்தையும் வென்றாா். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது.
கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தோனேஷியாவின் மாா்வான் பஸா/ஆய்ஷா பிரனதாவும், மகளிா் இரட்டையரில் பல்கேரியாவின் கேப்ரியலா-ஸ்டெப்பானியும், ஆடவா் இரட்டையரில் இந்தோனேஷியாவின் அலி பாதிா்/டெவின் அா்தாவும் பட்டம் வென்றனா்.

