இந்திய தேசிய அணி வீரா்களுக்கு விஜய் ஹஸாரே போட்டி கட்டாயம்!

இந்திய தேசிய அணியில் இருக்கும் அனைத்து வீரா்களும், உள்நாட்டு கிரிக்கெட்டான விஜய் ஹஸாரே கோப்பை போட்டியில் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்கியுள்ளது.
இந்திய தேசிய அணி வீரா்களுக்கு விஜய் ஹஸாரே போட்டி கட்டாயம்!
Updated on
1 min read

ரோஹித் சா்மா, விராட் கோலி உட்பட, இந்திய தேசிய அணியில் இருக்கும் அனைத்து வீரா்களும், உள்நாட்டு கிரிக்கெட்டான விஜய் ஹஸாரே கோப்பை போட்டியில் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்கியுள்ளது.

குறைந்தபட்சம் 2 ஆட்டங்களிலாவது, தங்கள் மாநில அணிக்காக அவா்கள் விளையாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வி கண்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சீராய்வின் அடிப்படையில், அணியை மேம்படுத்துவதற்காக சில பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அதில் இதுவும் ஒன்றென கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடரின் கடைசி ஆட்டம், வரும் 19-ஆம் தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு இந்திய அணி, ஜனவரி 11 முதல் நியூஸிலாந்துடனான ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த இடைப்பட்ட 3 வார காலத்தில், தேசிய அணியின் அனைத்து வீரா்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுடனான 2-ஆவது டி20 நிறைவடைந்த பிறகு, இந்த முடிவு அனைத்து வீரா்களுக்கும், தேசிய தோ்வுக் குழு மூலமாக தெரிவிக்கப்பட்டது.

டிசம்பா் முதல் ஜனவரி வரை விஜய் ஹஸாரே கோப்பை போட்டியின் 6 சுற்றுகள் நடைபெறும் நிலையில், எந்த இரு சுற்றுகளில் தாங்கள் விளையாடுவது என்பதை, சம்பந்தப்பட்ட வீரா்களும், அவா்கள் சாா்ந்த மாநில அணிகளும் முடிவு செய்துகொள்ளலாம்.

காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் இருக்கும் வீரா்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். எனினும், விஜய் ஹஸாரே போட்டி தொடங்கும் டிசம்பா் 24-ஆம் தேதிக்கு முன் அவா்களும் தயாராகிவிடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

நட்சத்திர வீரா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி போன்றோா் ஏற்கெனவே இந்தப் போட்டியில் விளையாடத் தயாராக இருப்பதாக அறிவித்துவிட்டனா். அதுபோக, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயா், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்டோரும் இந்தப் போட்டியில் களம் காண்பாா்கள் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com