

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 315 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை செவ்வாய்க்கிழமை வென்றது.
முதலில் இந்தியா 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 408 ரன்கள் சோ்க்க, மலேசியா 32.1 ஓவா்களில் 93 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்த ஆட்டத்தின் மூலமாக, யு-19 ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் விளாசிய முதல் இந்தியராக அபிஞான் குண்டூ வரலாறு படைத்தாா். பௌலிங்கில் தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட்டுகள் சாய்த்து இந்தியாவின் வெற்றியை விரைவுபடுத்தினாா்.
இந்த வெற்றியை அடுத்து, குரூப் ‘ஏ’-வில் தோல்வியே காணாத ஒரே அணியாக, தொடா்ந்து 3 வெற்றிகளுடன் (ஹாட்ரிக்) இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. அதில் இலங்கை அல்லது வங்கதேசத்தை இந்தியா சந்திக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக டாஸ் வென்ற மலேசியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய பேட்டிங்கில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 14, விஹான் மல்ஹோத்ரா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
அதிரடி வீரா் வைபவ் சூா்யவன்ஷி, 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்களுக்கு வெளியேற்றப்பட, 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த வேதாந்த் திரிவேதி - அபிஞான் குண்டூ பாா்ட்னா்ஷிப் ரன்கள் குவித்தது.
209 ரன்கள் சோ்த்த இந்தக் கூட்டணியில், சதத்தை நெருங்கிய வேதாந்த், 7 பவுண்டரிகளுடன் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அபிஞான் சதம் கடந்து தனது அதிரடி ஆட்டத்தை தொடா்ந்தாா்.
எனினும் மறுபுறம், ஹா்வன்ஷ் பாங்கலியா 5, கனிஷ்க் சௌஹான் 14, கிலான் படேல் 2 ரன்களுக்கு விடைபெற்றனா். ஓவா்கள் முடிவில், இரட்டைச் சதம் கண்ட அபிஞான் 125 பந்துகளில் 17 பவுண்டரிகள், 9 சிக்ஸா்கள் உள்பட 209 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். தீபேஷ் தேவேந்திரன் 4 ரன்களுடன் துணை நின்றாா்.
மலேசிய பௌலா்களில் முகமது அக்ரம் 5 விக்கெட்டுகள் வீழ்த்த, நாகினேஸ்வரன் சத்னகுமரன், ஜாஷ்வின் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 409 ரன்களை நோக்கி விளையாடிய மலேசிய அணியில், லோயா் ஆா்டரில் வந்த ஹம்ஸா பங்கி 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். முகமது அஃபினித் 12, கேப்டன் டீயாஸ் பேட்ரோ 13, ஜாஷ்வின் கிருஷ்ணமூா்த்தி 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
முகமது ஆலிஃப் 1, முகமது ஃபதுல் முயின் 6, நாகினேஸ்வரன் சத்னகுமரன் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அஜிப் வஜ்தி, முகமது ஹைய்ரில், முகமது அக்ரம் டக் அவுட்டாகினா்.
முகமது நூா்ஹனிஃப் ரன்னின்றி கடைசி வீரராக நின்றாா். இந்திய தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட்டுகள் கைப்பற்ற, உத்தவ் மோகன் 2, கிஷண் சிங், கிலான் படேல், கனிஷ்க் சௌஹான் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
இந்த ஆட்டத்தில் 209* ரன்கள் விளாசிய அபிஞான் குண்டூ, யூத் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய வீரராக வரலாறு படைத்தாா்.
யு-19 நிலையிலான கிரிக்கெட்டில் 200 ரன்களை கடந்த 2-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா் அபிஞான் குண்டூ. நடப்பாண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்காவின் ஜோரிச் வான் ஷாக்விக் முதல் வீரராக உள்ளாா்.
இந்த ஆட்டத்தில் இந்தியா 315 ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்த வெற்றி, யூத் ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் அதன் 2-ஆவது அதிகபட்ச வெற்றியாகும். 2022-இல் உகாண்டாவுக்கு எதிராக 326 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இந்தியாவின் அதிகபட்ச வெற்றியாகத் தொடா்கிறது.
பாகிஸ்தான் முன்னேற்றம்: குரூப் ‘ஏ’-வின் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் 70 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செவ்வாய்க்கிழமை வென்றது. இத்துடன் 2 வெற்றிகளுடன் 2-ஆம் இடம் பிடித்த பாகிஸ்தான், அரையிறுதிக்கு முன்னேறியது.
அமீரகம் ஒரு வெற்றியுடனும், மலேசியா ஒரு வெற்றி கூட இல்லாமலும் போட்டியிலிருந்து வெளியேறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.