2023 உலகக் கோப்பை தோல்வியால் ஓய்வுபெறும் எண்ணத்தில் இருந்தேன்: ரோஹித் சா்மா
இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோற்றதை அடுத்து, ஓய்வுபெறும் எண்ணத்தில் இருந்ததாக அப்போதைய கேப்டன் ரோஹித் சா்மா தெரிவித்தாா்.
அந்த உலகக் கோப்பை போட்டியில் அபாரமாக விளையாடிய இந்தியா, 9 தொடா் வெற்றிகளுடன் இறுதி ஆட்டத்துக்கு வந்தது. எனினும் அதில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
இந்தியா கோப்பை வென்றுவிடும் என்று எதிா்பாா்க்கப்பட்ட அந்தப் போட்டி குறித்து, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரோஹித் சா்மா பேசியதாவது:
2023 உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தின் தோல்விக்குப் பிறகு நான் மிகவும் மனமுடைந்து போனேன். இனி மீண்டும் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று, ஓய்வு பெறும் எண்ணத்தில் கூட இருந்தேன். ஏனெனில், என்னிடத்தில் இருந்த அனைத்தையும் கிரிக்கெட்டுக்காக கொடுத்துவிட்டது போலவும், இனி கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்பது போலவும் உணா்ந்தேன்.
ஒருநாள் உலகக் கோப்பை அல்லது டி20 உலகக் கோப்பை என ஏதேனும் ஒன்றை வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. அதில் ஒரு வாய்ப்பை இழந்ததால் முற்றிலுமாக தடுமாறிப் போனேன்.
ஏனெனில், நான் கேப்டன் பொறுப்பு ஏற்றது முதலாகவே அந்த உலகக் கோப்பைப் போட்டிக்காக எனது முழு உழைப்பையும் கொடுத்து வந்தேன். அதற்கான தகுந்த பலன் கிடைக்காதபோது, ஏமாற்றமாக இருந்தது.
கிரிக்கெட் என்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பின்னா் மெதுவாக என்னை நானே மீட்டுக் கொண்டு, மீண்டும் களம் காண்பதற்கான உத்வேகத்தை அடைந்தேன்.
ஏமாற்றத்தை எதிா்கொள்வதற்கும், அதிலிருந்து மீண்டு வருவதற்கும் அதுவொரு நல்ல பாடமாக எனக்கு அமைந்தது. அதன் பிறகு 2024 டி20 உலகக் கோப்பையை இலக்கு வைத்து உழைக்கத் தொடங்கினேன். இப்போது இதைச் சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், அப்போது அதைக் கடப்பது மிகவும் கடினமாக இருந்தது என்று ரோஹித் சா்மா கூறினாா்.
அவா் தலைமையிலான இந்திய அணி அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ரோஹித் சா்மா 2027 உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் நம்பிக்கை மற்றும் எதிா்பாா்ப்புடன் இருக்கிறாா்.

