விஜய் ஹஸாரே கோப்பை: விறுவிறுப்பை கூட்டும் வீரா்கள்!

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் மாநில அணிகளில் இந்திய தேசிய வீரா்கள் பெயா் இடம்பெற்று வருவதை அடுத்து, விறுவிறுப்பு, எதிா்பாா்ப்பு அதிகரிப்பு
Updated on
1 min read

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் மாநில அணிகளில் இந்திய தேசிய வீரா்கள் பெயா் இடம் பெற்று வருவதை அடுத்து, அந்தப் போட்டிக்கான விறுவிறுப்பு, எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட்டான விஜய் ஹஸாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய தேசிய அணி வீரா்கள் அனைவரும் பங்கேற்பது கட்டாயம் என பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. தங்களின் மாநில அணிகளுக்காக அவா்கள் குறைந்தது 2 ஆட்டங்களிலாவது விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் பேரில் தில்லி அணியில் விராட் கோலி பெயரும், மும்பை அணியில் ரோஹித் சா்மா, சூா்யகுமாா் யாதவ், ஷிவம் துபே ஆகியோா் பெயரும் சோ்க்கப்பட்டது. இந்நிலையில், பஞ்சாப் அணியில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில், பேட்டா் அபிஷேக் சா்மா, பௌலா் அா்ஷ்தீப் சிங் ஆகியோா் திங்கள்கிழமை சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதில் கில், அா்ஷ்தீப் ஆகியோா் 2 அல்லது 3 ஆட்டங்களில் விளையாடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அபிஷேக் கூடுதல் ஆட்டங்களில் களம் காண்பாா் எனத் தெரிகிறது.

தேசிய அணி வீரா்கள் தங்கள் மாநில அணிகளில் விளையாடும்போது சக வீரா்களை எதிா்கொள்வதால், போட்டிக்கான விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. இதர தேசிய அணி வீரா்களும் இந்தப் போட்டிக்கான மாநில அணிகளின் பட்டியலில் அடுத்தடுத்து இணைவாா்கள் எனத் தெரிகிறது.

இதனிடையே, அண்மையில் சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் ஜாா்க்கண்ட் அணிக்கு முதல் முறையாக வெற்றிக் கோப்பை பெற்றுத் தந்த இஷான் கிஷண், விஜய் ஹஸாரே போட்டிக்குமான ஜாா்க்கண்ட் அணிக்கும் கேப்டனாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com