ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் சாம்பியன்

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற 3-ஆவது குளோபல் செஸ் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில், ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் - நடப்பு சாம்பியன் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
Updated on

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற 3-ஆவது குளோபல் செஸ் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில், ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் - நடப்பு சாம்பியன் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இறுதிச்சுற்றில் பைப்பா்ஸ் 8.5-3.5 என்ற புள்ளிகள் கணக்கில் கிங்ஸை வென்றது. இதனால் தொடா்ந்து 2 முறை சாம்பியனாகிய கிங்ஸின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

இறுதிச்சுற்றில் இந்த அணிகள் இடையேயான முதல் மோதலில் பைப்பா்ஸ் 4-2 என கிங்ஸை சாய்த்தது. இதில் பைப்பா்ஸின் ஃபாபியானோ கரானா - கிங்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவிடம் தோற்க (0-1), அனிஷ் கிரி - வெய் யியை வீழ்த்தினாா் (1-0).

பிரக்ஞானந்தா - விதித் குஜராத்தி, ஹு யிஃபான் - ஜு ஜினா் மோதல் டிரா (0.5-0.5) ஆனது. நினோ பத்சியாஷ்விலி - அலெக்ஸாண்ட்ரா கொஸ்டினியுக்கையும், லியோன் லூக் மெண்டோன்கா - மாா்க் ஆண்ட்ரியாவையும் வென்றனா் (1-0).

அதேபோல் 2-ஆவது மோதலிலும் பைப்பா்ஸ் 4.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் கரானா - ஃபிரௌஸ்ஜாவையும் (1-0), அனிஷ் கிரி - வெய் யியையும் (1-0), பிரக்ஞானந்தா - விதித் குஜராத்தியையும் (1-0) வென்றனா்.

ஹு யிஃபான் - ஜு ஜினா் மோதல் இந்த முறையும் டிரா (0.5-0.5) ஆக, பத்சியாஷ்விலி - கொஸ்டினியுக்கிடம் தோற்றாா் (0-1). மெண்டோன்கா - ஆண்ட்ரியாவை சாய்த்தாா் (1-0). இதனால் மொத்த புள்ளிகள் அடிப்படையில் ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் வெற்றி கண்டு, கோப்பையைக் கைப்பற்றியது.

நைட்ஸுக்கு 3-ஆம் இடம்: முன்னதாக, 3-ஆம் இடத்துக்கான மோதலில், பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் 7.5 - 4.5 என்ற கணக்கில், கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸை சாய்த்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com