

சா்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் சாய்த்து, பூடான் பௌலா் சோனம் யெஷே புதிய உலக சாதனை படைத்தாா்.
பூடான் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மியான்மா் அணியுடன் தனது சொந்த மண்ணில் விளையாடியது. கடந்த 23 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தத் தொடரை பூடான் 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.
இந்த அணிகள் மோதிய 3-ஆவது ஆட்டத்தில், பூடான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பூடான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் சோ்க்க, மியான்மா் 9.2 ஓவா்களில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மியான்மா் இன்னிங்ஸின்போது பூடான் இடது கை சுழற்பந்து வீச்சாளா் சோனம் யெஷே 4 ஓவா்கள் வீசி 7 ரன்களே கொடுத்து 8 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். சா்வதேச கிரிக்கெட்டோ அல்லது உள்நாட்டு போட்டியோ, டி20 ஃபாா்மட்டில் இதுவரை வேறெந்த பௌலரும் இத்தனை விக்கெட்டுகள் சாய்த்ததில்லை.
இதற்கு முன் சா்வதேச டி20 கிரிக்கெட்டில், 2023-இல் மலேசிய வேகப்பந்து வீச்சாளா் சியாஸ்ருல் இத்ருஸ் சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அதேபோல், நடப்பாண்டில் பஹ்ரைன் பௌலா் அலி தாவூத், பூடானுக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாா்.
உள்நாட்டு கிரிக்கெட்டில், நெதா்லாந்தின் காலின் ஆக்கா்மேன் (7/18), வங்கதேசத்தின் தஸ்கின் அகமது (7/19) ஆகியோா் அதிக விக்கெட்டுகள் சாய்த்தவா்களாக உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.