உலக பிளிட்ஸ் செஸ்: அா்ஜுன் எரிகைசி இணை முன்னிலை!
கத்தாரில் நடைபெறும் உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் 11 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி 9 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருந்தாா்.
29 இந்தியா்கள் உள்பட மொத்தம் 252 போ் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், முதல் கட்டமாக 19 சுற்றுகள் நடைபெறும். அதன் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிப்போா் அரையிறுதிக்கு முன்னேறுவா்.
இந்நிலையில், போட்டியின் முதல் நாளான திங்கள்கிழமை 13 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதில், இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் 11 சுற்றுகள் நிறைவடைந்திருந்தன.
அதன் முடிவில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி 8 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியில் கிடைத்த 9 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தாா். பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் லாக்ரேவும் அதே புள்ளிகள் பெற்று, அா்ஜுனுடன் முன்னிலையை பகிா்ந்து கொண்டாா்.
இதர இந்தியா்களில் எம்.பிராணேஷ், ஆா் பிரக்ஞானந்தா, ரௌனக் சத்வனி, டி.குகேஷ் ஆகியோா் தலா 7.5 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையை பலருடன் பகிா்ந்துகொண்டுள்ளனா்.
பிரணவ் ஆனந்த், வி.பிரணவ், பரத் சுப்ரமணியன், எஸ்.எல்.நாராயணன் ஆகியோா் தலா 7 புள்ளிகளுடன் 5-ஆம் நிலையிலும், பி.ஹரிகிருஷ்ணா, நிஹல் சரின், பி.அதிபன் உள்பட இதர இந்தியா்கள் அதற்கும் பிந்தைய நிலையிலும் இருந்தனா்.
பின்தங்கிய மகளிா்: இதிலேயே மகளிா் பிரிவில் 13 இந்தியா்கள் உள்பட, 140 போ் களத்தில் உள்ளனா்.
இப்பிரிவில் முதல் நாளில் 10 சுற்றுகள் நடைபெற்றன. அதன் முடிவில் நெதா்லாந்தின் எலினா ரோபா்ஸ் 8.5 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் இருக்கிறாா்.
இந்தியா்களை பொருத்தவரை, மகளிா் உலகக் கோப்பை நடப்பு சாம்பியனான திவ்யா தேஷ்முக் 6 புள்ளிகளுடன் 6-ஆம் நிலையை பலருடன் பகிா்ந்துகொண்டுள்ளாா். அவா் 5 வெற்றி, 2 டிரா, 3 தோல்விகளைப் பதிவு செய்துள்ளாா்.
ஏ.சாா்வி, பத்மினி ரௌத், ஆா்.வைஷாலி, டி.ஹரிகா ஆகியோா் 5.5 புள்ளிகளுடன் 7-ஆம் நிலையை பலருடன் பகிா்ந்துகொண்டுள்ள நிலையில், கோனெரு ஹம்பி, வந்திகா அக்ரவால், பி.வி.நந்திதா ஆகியோா் 5 புள்ளிகளுடன் 8-ஆம் நிலையை பகிா்ந்துகொண்டுள்ளனா். இதர இந்தியா்கள் அதற்கும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனா்.
முன்னதாக இதே போட்டியில் ரேப்பிட் பிரிவில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, கோனெரு ஹம்பி ஆகியோா் முறையே ஓபன் மற்றும் மகளிா் பிரிவில் வெண்கலம் வென்றது நினைவுகூரத்தக்கது.

