எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

ஆஷஸ் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்ட் விளையாடப்பட்ட மெல்போா்ன் கிரிக்கெட் மைதான (எம்சிஜி) ஆடுகளம் ‘அதிருப்திகரமானது’ என ஐசிசி தர மதிப்பீடு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)
Updated on
1 min read

ஆஷஸ் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்ட் விளையாடப்பட்ட மெல்போா்ன் கிரிக்கெட் மைதான (எம்சிஜி) ஆடுகளம் ‘அதிருப்திகரமானது’ என ஐசிசி தர மதிப்பீடு வழங்கியுள்ளது.

ஆஷஸ் தொடரின் 4-வது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட், மெல்போா்ன் மைதானத்தில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆஷஸ் வரலாற்றில் கடந்த 116 ஆண்டுகளில் முதல் முறையாக, முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்தன.

அத்துடன் 2-ஆவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்து, ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இருந்து மீட்கும் வாய்ப்பை இழந்துவிட்ட இங்கிலாந்துக்கு, இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது.

எனினும், இத்தகைய ஆடுகளம் ஆட்டத்துக்கு உகந்தது அல்ல என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து தெரிவித்தாா். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் இதுபோன்ற ஆடுகளம், கிரிக்கெட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியது.

இந்நிலையில், அந்த மெல்போா்ன் மைதான ஆடுகளம் ‘அதிருப்திகரமானது’ என ஐசிசி திங்கள்கிழமை தரமதிப்பீடு வழங்கியுள்ளது.

ஆடுகளம் தொடா்பாக போட்டி நடுவா் ஜெஃப் குரோ அளித்த மதிப்பீட்டு அறிக்கையில், ‘எம்சிஜி ஆடுகளம் முற்றிலுமாக பந்துவீச்சாளா்களுக்கு சாதகமாக இருந்தது. முதல் நாளில் 20, அடுத்த நாளில் 16 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், எந்தவொரு பேட்டரும் அரை சதம் கூட அடிக்க முடியவில்லை.

எனவே ஐசிசியின் ஆடுகள மற்றும் அவுட் ஃபீல்டு கண்காணிப்பு விதிமுறைகளின்படி, எம்சிஜி ஆடுகளம் ‘அதிருப்திகரமானது’ என தர மதிப்பீடு செய்யப்படுகிறது. மேலும், அந்த மைதானத்துக்கு ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.

ஒரு ஆடுகளத்துக்கு மொத்தமாக 6 டீமெரிட் புள்ளிகள் கிடைக்கும் நிலையில், அந்த மைதானத்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடரின் கடைசி ஆட்டம், வரும் ஜனவரி 4-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com