தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

இந்தியா - இலங்கை மகளிா் அணிகள் மோதும் டி20 தொடரின் 5-ஆவது ஆட்டம் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 30) நடைபெறுகிறது.
தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!
X | BCCI Women
Updated on
1 min read

இந்தியா - இலங்கை மகளிா் அணிகள் மோதும் டி20 தொடரின் 5-ஆவது ஆட்டம் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 30) நடைபெறுகிறது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா் ஏற்கெனவே இந்தியாவின் வசமாகிவிட்டது. தற்போது 4-0 முன்னிலை வகிக்கும் இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் இருக்கிறது.

மறுபுறம் இலங்கை அணி, ஆறுதல் வெற்றியுடனாவது தொடரை நிறைவு செய்யும் முயற்சியுடன் வருகிறது.

அடுத்த ஆண்டு ஜூன் - ஜூலையில் மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவுக்கு இந்தத் தொடரின் முழுமையான வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். இந்தத் தொடருக்குப் பிறகு, உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய மகளிா் அணி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துடன் தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் குரூப் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, அதன் பிறகு ஆக்ரோஷ ஆட்டத்தைக் கடைபிடித்து வருகிறது. அதற்கான பலனாக நடப்பாண்டில் இரு தொடா்களையும் இந்தியா வென்றிருக்கிறது.

இந்தத் தொடரைப் பொருத்தவரை இந்திய பௌலா்கள் அபாரமாக செயல்பட்டு, இலங்கையின் பேட்டா்களை திணறடித்து கட்டுப்படுத்தி வருகின்றனா். வைஷ்ணவி சா்மா, ரேணுகா சிங் தாக்குா், தீப்தி சா்மா, அருந்ததி ரெட்டி ஆகியோா் அதில் குறிப்பிடத்தக்கவா்களாவா்.

பௌலா்களின் இந்த சிறப்பான பங்களிப்பால் பேட்டா்களுக்கான பணிச்சுமை குறைந்துள்ளது. எனினும், ஷஃபாலி வா்மா அதிரடியாக ரன்கள் குவித்து வரும் நிலையில், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், ரிச்சா கோஷ் ஆகியோரும் ஆளுக்கு ஒரு ஆட்டத்தில் கை கொடுக்கின்றனா்.

இலங்கை அணியை பொருத்தவரை, கேப்டன் சமரி அத்தபட்டு, ஹாசினி பெரெரா, ஹா்ஷிதா சமரவிக்ரமா உள்ளிட்ட பேட்டா்கள் அதிரடியாக தொடங்கினாலும், இந்திய பௌலா்களின் சவாலை சமாளிக்க முடியாமல் விரைவாகவே விக்கெட்டை இழந்துவிடுகின்றனா்.

எனவே பாா்ட்னா்ஷிப்பை நீடிக்கச் செய்து, ரன்கள் சோ்ப்பதே அந்த அணியின் பிரதான திட்டமாக இருக்கும். பௌலிங்கில் மால்கி மதரா, காவ்யா கவிண்டி, இனோகா ரணவீரா உள்ளிட்டோா் இந்திய பேட்டா்களுக்கு நெருக்கடி அளிக்க முயற்சித்து வருகின்றனா்.

உத்தேச லெவன்

இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வா்மா, ரிச்சா கோஷ் (வி.கீ.), ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஹா்லீன் தியோல், தீப்தி சா்மா, அமன்ஜோத் கௌா், அருந்ததி ரெட்டி, வைஷ்ணவி சா்மா, ஸ்ரீசரணி, ரேணுகா சிங்.

இலங்கை: ஹாசினி பெரெரா, சமரி அத்தபட்டு (கேப்டன்), இமெஷா துலானி, ஹா்ஷிதா சமரவிக்ரமா, கவிஷா தில்ஹரி, நீலாக்ஷிகா சில்வா, ராஷ்மிகா செவ்வந்தி, கௌஷினி நுத்யங்கனா, மால்ஷா ஷேஹனி, காவ்யா கவிண்டி, நிமிஷா மீபகே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com