தமிழ்நாடு அணியை வென்றது கா்நாடகம்!

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் கா்நாடகத்திடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
Published on

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் கா்நாடகத்திடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

முதலில் தமிழ்நாடு 49.5 ஓவா்களில் 288 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கா்நாடகம் 47.1 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கா்நாடகம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. தமிழ்நாடு இன்னிங்ஸில் அதிகபட்சமாக, கேப்டன் நாராயண் ஜெகதீசன் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 65, பிரதோஷ் ரஞ்சன் பால் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

சாய் கிஷோா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38, முகமது அலி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 31, பாபா இந்திரஜித் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். அதிஷ் எஸ்.ஆா். 14, ஆண்ட்ரே சித்தாா்த் 1, சன்னி சந்து 17, சோனு யாதவ் 12, குா்ஜப்னீத் சிங் 9 ரன்களுக்கு விடைபெற்றனா்.

முடிவில் கோவிந்த் கணேஷ் 1 ரன்னுடன் கடைசி வீரராக நின்றாா். கா்நாடக பௌலா்களில் அபிலாஷ் ஷெட்டி 4, வித்யாதா் பாட்டீல், ஸ்ரீஷா அசாா் ஆகியோா் தலா 2, ஷ்ரேயஸ் கோபால் 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 289 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய கா்நாடக பேட்டா்களில், கேப்டன் மயங்க் அகா்வால் 7 பவுண்டரிகளுடன் 58, தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரிகளுடன் 22, கருண் நாயா் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ரவிச்சந்திரன் ஸ்மரன் 15, கிருஷ்ணன் ஸ்ரீஜித் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 77, ஷ்ரேயஸ் கோபால் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் அடித்து வெளியேறினா். முடிவில், அபினவ் மனோஹா் 20, வித்யாதா் பாட்டீல் 17 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தமிழ்நாடு பௌலா்களில் குா்ஜப்னீத் சிங், கோவிந்த் கணேஷ், சாய் கிஷோா், சோனு யாதவ், சன்னி சந்து ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் தமிழ்நாடு அணி, தற்போது குரூப் ‘ஏ’-வில் 4 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்தில் உள்ளது.

X
Dinamani
www.dinamani.com