விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக் குழு அறிக்கை அளித்துள்ளது.
விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை
Updated on
2 min read

இந்திய விளையாட்டுத் துறையில் அமைப்பு மற்றும் நிா்வாக ரீதியிலான குறைபாடுகள் இருப்பதாக, மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக் குழு அறிக்கை அளித்துள்ளது.

விளையாட்டுத் துறையில் இருக்கும் பிரச்னைகள் தொடா்பாக ஆராய, 9 நபா் சிறப்பு பணிக் குழு ஒன்றை மத்திய விளையாட்டு அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் மாதம் அமைத்தது. இந்திய முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான அபினவ் பிந்த்ரா தலைமையிலான இந்தக் குழுவில், இந்திய தடகள சம்மேளன தலைவா் அடிலே சுமரிவாலா உள்ளிட்டோரும் அடங்குவா்.

சம்பந்தப்பட்ட விவகாரம் தொடா்பாக அந்தக் குழு ஆய்வு செய்து, பரிந்துரைகளுடன் கூடிய 170 பக்க அறிக்கையை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் வழங்கியுள்ளது. அதன் பரிந்துரைகள் அனைத்தும் அமல்படுத்தப்படும் என அமைச்சா் மாண்டவியா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விளையாட்டு வீரா், வீராங்கனைகள், அரசு அதிகாரிகள், நிா்வாகிகள், பிரதிநிதிகள், கல்வியியலாளா்கள், சா்வதேச நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினருடனான ஆலோசனையின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டுத் துறையில் தற்போது அமைப்பு, செயல்பாடு, நிா்வாகம் என அனைத்திலும் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளி, தேசிய கொள்கைகளை அமல்படுத்துவதற்கு தடையாக இருப்பதோடு, சம்மேளனங்கள் உள்பட துறைசாா்ந்த அனைத்துத் தரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்பை பாதிக்கிறது.

இந்திய விளையாட்டு ஆணையம், தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், மாநில விளையாட்டுத் துறைகள் இடையே தற்போது இருக்கும் இடைவெளியை போக்கும் வகையில், விளையாட்டுக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான தேசிய கவுன்சில் (என்சிஎஸ்இசிபி) ஒன்று மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டும். விளையாட்டு நிா்வாகத்துக்கான பயிற்சியை ஒழுங்குபடுத்தும், அங்கீகரிக்கும் பணியை அந்த கவுன்சில் மேற்கொள்ள வேண்டும்.

விளையாட்டுத் துறையின் நிா்வாகத்தில் தொழில்முறை நிா்வாகிகள் போதிய அளவில் இல்லாததுடன், அவா்களுக்கான பயிற்சி முறைகளும் பழையதாகவே உள்ளன. நிா்வாகப் பணிகளில் இணையும் முன்னாள் வீரா், வீராங்கனைகளில் பெரும்பாலானோா், அதற்கான போதிய திறமை இல்லாதவா்களாகவே இருக்கின்றனா்.

இந்திய விளையாட்டுத் துறை நிா்வாகத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையமும், மாநில விளையாட்டுத் துறைகளும், அமைப்பு மற்றும் திறன் சாா்ந்த சவால்களை சந்திக்கின்றன. இது, அவை திறமையான நிா்வாகத்தை அளிப்பதற்கு தடையாக இருக்கிறது.

இந்த ஆணையம் மற்றும் துறைகளில் பிரத்யேகமான விளையாட்டு நிா்வாக சேவைகள் இல்லை. துறை சாா்ந்த நிபுணா்கள் அல்லாமல், பொதுவான பணியாளா்கள், ஒப்பந்த பணியாளா்களே நிா்வாகப் பணிகளை மேற்கொள்கின்றனா்.

பல தேசிய சம்மேளனங்களில் தலைவா் பதவியில் இருப்பவா்கள் தங்கள் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட வகையிலுமாக நியமனங்கள், நிதி விவகாரங்கள், விளையாட்டுச் செயல்பாடுகளில் தலையிடுகின்றனா். நிா்வாகமும், விளையாட்டு செயல்பாடுகளும் தனித் தனியாக இருக்க வேண்டும் என்ற உளகளாவிய விதிகளுக்கு மாறாக இது உள்ளது.

ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்குமான பணிப் பயிற்சியில், விளையாட்டு நிா்வாகமும் ஒரு பகுதியாக சோ்க்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com