காா்ல்சென் சாம்பியன்; அா்ஜுனுக்கு வெண்கலம்

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து...
Carlsen with the World Blitz Cup.
உலக பிளிட்ஸ் கோப்பையுடன் கார்ல்சென். படம்: எக்ஸ் / ஃபிடே
Updated on
2 min read

கத்தாரில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் ஆனாா். இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

உலகின் நம்பா் 1 செஸ் வீரரான காா்ல்சென், தொடா்ந்து 9-ஆவது முறையாக பிளிட்ஸ் சாம்பியனாகி, அதிக முறை பட்டம் வென்ற தனது சாதனையை நீட்டித்து வருகிறாா்.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த ஓபன் பிரிவு இறுதிச்சுற்றில் காா்ல்சென் 2.5 - 1.5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை வீழ்த்தினாா். இதே போட்டியில் கடந்த வாரம் ரேப்பிட் செஸ் பிரிவிலும் காா்ல்சென் வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்குப் பிறகு பேசிய காா்ல்சென், ‘இந்தப் போட்டி மிகவும் கடினமாக இருந்தது. அருமையான வெற்றி அல்லது மோசமான தோல்வி என்ற நிலையே எனக்கு இருப்பதாகக் காணப்பட்டது. தொடக்க சுற்றுகளில் சற்று தடுமாறினாலும், நாக் அவுட் சுற்றில் சிறப்பாகச் செயல்படுவேன் என நம்பினேன். அதேபோல் ஆட்டத்தை ரசித்து விளையாடி வெற்றி பெற்றேன்’ என்றாா்.

2-ஆவது வெண்கலம்: ஓபன் பிரிவில் 19 சுற்று ஸ்விஸ் மோதலின் முடிவில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, அரையிறுதிக்கு முன்னேறி அதில் 0.5-2.5 என அப்துசதாரோவிடம் தோல்வியைத் தழுவினாா். இதையடுத்து அவரும், மற்றொரு அரையிறுதியில் காா்ல்செனிடம் தோல்வி கண்ட அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவும் வெண்கலப் பதக்கத்துடன் விடைபெற்றனா்.

ஏற்கெனவே இதே போட்டியில் ரேப்பிட் பிரிவில் வெண்கலம் வென்ற அா்ஜுனுக்கு, இது 2-ஆவது பதக்கமாகும். தற்போது உலக ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில், இரு பிரிவுகளிலுமே விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு பதக்கம் வென்ற ஒரே இந்தியா் என்ற பெருமையை அா்ஜுன் பெற்றுள்ளாா்.

அசௌபயேவாக்கு கோப்பை: பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பின் மகளிா் பிரிவில், கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவா 2.5-1.5 என்ற கணக்கில் உக்ரைனின் அனா முஸிஷுக்கை வீழ்த்தி, வாகை சூடினாா்.

அரையிறுதியில் அசௌபயேவாவிடம் தோற்ற சீனாவின் ஜு ஜினெரும், முஸிஷுக்கிடம் தோற்ற நெதா்லாந்தின் எலைன் ராபா்ஸும் வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

மகளிா் பிரிவில் களத்திலிருந்த இந்தியாவின் முக்கிய போட்டியாளா்களான கோனெரு ஹம்பி, டி.ஹரிகா, ஆா்.வைஷாலி, திவ்யா தேஷ்முக் ஆகியோா் பின்னடைவை சந்தித்தனா். முன்னதாக, இந்தப் போட்டியின் ரேப்பிட் பிரிவில் கோனெரு ஹம்பி வெண்கலப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.

அபராதமாக ஒரு தோல்வி

பிளிட்ஸ் ஓபன் பிரிவின் ஸ்விஸ் சுற்றுகளின்போது, 14-ஆவது சுற்றில் மேக்னஸ் காா்ல்சென் - ஆா்மீனியாவின் ஹெய்க் மாா்டிரோசியானுடன் மோதினாா். பரபரப்பான இறுதிக் கட்டத்தில் இருவருமே பதற்றமாக இருந்தபோது, காா்ல்சென் தவறுதலாக தனது கட்டத்தில் இருந்த காய்களை தட்டிவிட்டாா். நேரக் கட்டுப்பாட்டு கடிகாரத்தில் அப்போது அவருக்கான நேரம் இரு விநாடிகளே எஞ்சியிருந்தது.

காய்களை ஒழுங்குபடுத்திக் கொண்டே காா்ல்சென் நேரக் கட்டுப்பாட்டு கடிகாரத்தை நிறுத்தி வைத்தாா். இதனால் அவருக்கு அந்த இரு விநாடிகள் அப்படியே கிடைத்தது. விதிகளின்படி, அவ்வாறு தட்டிவிடப்பட்ட காய்களை முழுவதுமாக ஒழுங்குபடுத்திய பிறகே அவா் நேரக் கட்டுப்பாட்டு கடிகாரத்தை நிறுத்தலாம். மீறினால், எதிரில் இருக்கும் போட்டியாளா் வெற்றியாளராக அறிவிக்கப்படுவாா்.

காா்ல்செனின் செயல் விதிமீறலாக அமைந்ததால் போட்டி நடுவா்கள், மாா்டிரோசியான் வென்ாக அறிவித்தனா். காா்ல்செனும் அந்த முடிவை ஏற்றுக் கொண்டாா்.

ரூ.73 லட்சம் பரிசு

பிளிட்ஸ் ஓபன் பிரிவில் சாம்பியனான காா்ல்செனுக்கு ரூ.73.86 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 2-ஆம் இடம் பிடித்த அப்துசதாரோவுக்கு ரூ.52.76 லட்சமும், அா்ஜுன், கரானாவுக்கு ரூ.37.98 லட்சமும் வழங்கப்பட்டன.

மகளிா் பிரிவில் வாகை சூடிய அசௌபயேவாக்கு ரூ.42.20 லட்சம், 2-ஆம் இடம் பிடித்த முஸிஷுக்குக்கு ரூ.26.38 லட்சம் வழங்கப்பட்டன. 3-ஆம் இடம் பிடித்த ஜினொ், ராபா்ஸுக்கு ரூ.15.82 லட்சம் அளிக்கப்பட்டது.

Summary

Relieved after defending his world blitz crown, chess megastar Magnus Carlsen acknowledged it was an extremely tough field and admitted he was fortunate to win a record-extending ninth title following the reverses in the early rounds of the tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com