ரொனால்டோ, முர்ரே - ஜோகோவிச், மெஸ்ஸி.
ரொனால்டோ, முர்ரே - ஜோகோவிச், மெஸ்ஸி.

ரொனால்டோவுக்கு மெஸ்ஸி பயிற்சியாளர்: ஜோகோவிச் - முர்ரே குறித்து மெத்வதேவ்!

ஆஸி. ஓபனில் ஜோகோவிச்சுக்கு பயிற்சியாளராக ஓய்வு பெற்ற ஆண்டி முர்ரே செயல்படுகிறார்.
Published on

டென்னிஸ் வரலாற்றில் கால் நூற்றாண்டாக கடும் போட்டியாளர்களாக இருந்தவர்கள் சொ்பிய டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச், பிரிட்டன் முன்னாள் வீரரான ஆண்டி முர்ரே.

12 வயது முதல் இருவரும் விளையாடி வருகிறார்கள். இருவருக்கும் 37 வயதாகிறது. இருவரும் இதுவரை 36 முறை மோதியுள்ளார்கள். அதில் 10 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் என்பது குறிப்பிடத்தக்கது.

25-11, கிராண்ட்ஸ்லாமில் 8-2 என ஜோகோவிச் முன்னிலை வகிக்கிறார். இருப்பினும் அந்த 2 யுஎஸ் இறுதிப் போட்டிகள் ஆண்டி முர்ரேவின் மிகச் சிறந்த வெற்றிகளாக இருக்கின்றன.

நோவக் ஜோகோவிச், தனது பயிற்சியாளராக பிரிட்டன் முன்னாள் வீரரான ஆண்டி முா்ரேவை ஆஸி. ஓபனில் நியமித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டேனியல் மெதவதேவ் கூறியதாவது:

ஜோகோவிச் மிகவும் வலுவான வீரர். அவர் வெற்றி பெற்றால் அது அவராலா அல்லது ஆண்டி முர்ரேவாலா என்பது ஒரு விஷயமாக மாறும். டென்னிஸ் ரீதியாக, விளையாட்டு ரீதியாக, வருமானம் ரீதியாகவும் இது ஒரு மிகப்பெரிய கூட்டிணைவு.

நினைத்துப் பாருங்கள், மெஸ்ஸி ரொனால்டோவுக்கு பயிற்சியாளர் ஆனால் எப்படி இருக்குமோ அதுபோல் இது மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. இருவருமே டென்னிஸில் தலைசிறந்தவர்கள் என்றார்.

ஜோகோவிச் தனது முதல் போட்டியினை ஆஸி. ஓபனில் ஜன.12ஆம் தேதி விளையாடுகிறார்.

இது குறித்து ஜோகோவிச் கூறியதாவது:

ஆண்டி முர்ரே எப்போதும் என்னுடைய சிறந்த போட்டியாளர். அவரிடம் நெருங்கி செல்ல முடிந்ததே இல்லை. நாங்கள் இருவருமே எங்களைக் குறித்து இருவரிடமும் மறைத்து வைத்திருந்தோம். தற்போது அனைத்து யுக்திகளும் மேசையின்மீது கொண்டு வருகிறோம்.

அதிகமான கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர் எனக்கு பயிற்சியாளராக வேண்டுமென நினைத்தேன். வெற்றியின் முக்கியத்துவம் தெரிந்திருக்க வேண்டும். விளம்பரம், அழுத்தம், எதிர்பார்ப்புகள் இவற்றை எல்லாம் புரிந்தவராக இருக்க வேண்டும்.

6 மாதங்களுக்கு முன்புதான் ஆண்டி முர்ரே ஓய்வு பெற்றார். நான் அழைத்ததும் அவருக்கு அது அழுத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், அவரது டென்னிஸ் மதி நுட்பம் அதிகமாக இருக்கும். மிகவும் நுணுக்கமான அர்ப்பணிப்புள்ள வீரர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com