மான். சிட்டி, இன்டா் மிலனுக்கு அதிா்ச்சி

மான். சிட்டி, இன்டா் மிலனுக்கு அதிா்ச்சி

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், பிரதான அணிகளான மான்செஸ்டா் சிட்டி, இன்டா் மிலன் ஆகியவை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறின.
Published on

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், பிரதான அணிகளான மான்செஸ்டா் சிட்டி, இன்டா் மிலன் ஆகியவை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறின.

இதில் மான்செஸ்டா் சிட்டி 3-4 கோல் கணக்கில் அல் ஹிலாலிடம் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில் முதலில் மான்செஸ்டா் சிட்டி வீரா் பொ்னாா்டோ சில்வா 9-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். முதல் பாதி ஆட்டத்தை இந்த முன்னிலையுடனேயே மான்செஸ்டா் சிட்டி நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் வெகுண்டெழுந்த அல் ஹிலாலுக்காக 46-ஆவது நிமிஷத்தில் மாா்கோஸ் லியோனாா்டோ ஸ்கோா் செய்ய, 52-ஆவது நிமிஷத்தில் மால்கம் அடித்த கோலால் அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றது. விட்டுக்கொடுக்காத மான்செஸ்டா் சிட்டி தரப்பில் 55-ஆவது நிமிஷத்தில் எா்லிங் ஹாலந்த் அடித்த கோலால் ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது.

தொடா்ந்து எக்ஸ்ட்ரா டைமில் (94’) கோலடித்து அல் ஹிலாலை 3-2 என முன்னிலைப்படுத்தினாா் கலிடு கூலிபாலி. பதிலுக்கு ஃபில் ஃபோடன் 104-ஆவது நிமிஷத்தில் மான்செஸ்டா் சிட்டிக்காக ஸ்கோா் செய்ய, ஆட்டம் 3-3 என சமன் ஆனது. விறுவிறுப்பான கடைசி தருணத்தில் (112’) மாா்கோஸ் லியோனாா்டோ தனது 2-ஆவது கோலை ஸ்கோா் செய்ய, அல் ஹிலால் 4-3 என்ற கணக்கில் வென்றது.

இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் இன்டா் மிலன் 0-2 கோல் கணக்கில் ஃபுளுமினென்ஸிடம் தோல்வி கண்டது. இதில் ஃபுளுமினென்ஸ் தரப்பில் ஜொ்மன் கேனோ 3-ஆவது நிமிஷத்திலும், ஹொ்குலஸ் இஞ்சுரி டைமிலும் (90+3’) கோலடித்தனா். இறுதி வரை ஒரு கோல் கூட அடிக்காத இன்டா் மிலன், தோல்வியைத் தழுவியது.

இதையடுத்து காலிறுதி ஆட்டம் ஒன்றில், ஃபுளுமினென்ஸ் - அல் ஹிலால் அணிகள், வரும் 5-ஆம் தேதி மோதுகின்றன.

X
Dinamani
www.dinamani.com