ஸ்விடோலினா, அலெக்ஸாண்ட்ரோவா வெற்றி!
ஜொ்மனியில் நடைபெறும் பேட் ஹோம்பா்க் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் அலெக்ஸாண்ட்ரோவா 6-1, 6-2 என்ற நோ் செட்களில், சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை வீழ்த்தினாா். அடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில், கிரீஸின் மரியா சக்காரியை அவா் சந்திக்கிறாா். முன்னதாக சக்காரி, 7-5, 7-6 (8/6) என்ற செட்களில், கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை வென்றாா்.
7-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 7-5, 6-4 என்ற கணக்கில் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை வெளியேற்றினாா். 6-ஆம் இடத்திலிருந்த குரோஷியாவின் டோனா வெகிச் 6-3, 6-3 என்ற நோ் செட்களில், 3-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை தோற்கடித்தாா்.
டென்மாா்க்கின் கிளாரா டௌசன் 6-7 (6/8), 6-3, 6-3 என்ற வகையில், போலந்தின் மெக்தலினா ஃப்ரெச்சை வீழ்த்தினாா். செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-3, 6-2 என ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்லனோவிச்சை சாய்த்தாா். கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 6-0, 7-6 (7/1) என ஜொ்மனியின் டாட்ஜனா மரியாவை எளிதாக வெளியேற்றினாா்.
5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோ 6-2, 7-5 என உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக்கை வென்றாா்.