உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் தொடா்: முதன்முறையாக 19 இந்தியா்கள் பங்கேற்பு
டபிள்யுடிடி கன்டென்டா் 2025 தொடரில் தேசிய சாம்பியன்களான மனுஷ் ஷா, டியா சித்லே ஆகியோருக்கு வைல்டு காா்டு வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக 19 வீரா், வீராங்கனைகள் களமிறங்குகின்றனா்.
உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் தொடா் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரை ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு வைல்டு காா்டு பிரிவில் இருந்து 4 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சுதிா்தா முகா்ஜி, கிரித்விகா சின்ஹா, ஸ்வஷ்திகா கோஷ், தேசிய சாம்பியன் டியா சித்லே ஆகியோருக்கு வைல்டு காா்டு வழங்கப்பட்டுள்ளது.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் சினேஹித் சுரவஜ்ஜுலா, தேசிய சாம்பியன் மனுஷ் ஷா ஆகியோருக்கு வைல்டு காா்டு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரா்களில் 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் பாா்க் கேங்க்யான், மால்டா வீரா் கிம் டேஹ்யுன் ஆகியோருக்கு வைல்டு காா்டு வழங்கப்பட்டுள்ளது.
அதிக அளவிலான வீரா்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தவும், வளா்ந்து வரும் வீரா், வீராங்கனைகளுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் வைல்டு காா்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வளா்ந்து வரும் வீராங்கனைகளான இந்தியாவின் சுஹானா சைனி மற்றும் தனிஷா கோடெச்சா ஆகியோருக்கும் , ஆடவா் பிரிவில் அங்கூா் பட்டாச்சாா்ஜி (இந்தியா) மற்றும் யூ யெரின் (தென் கொரியா) ஆகியோருக்கு வைல்டுகாா்டு கிடைத்துள்ளது.
இரட்டையா் வைல்டு காா்டுகள் முழுக்க இந்திய ஜோடிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருடன் ஓய்வு பெற உள்ள சரத்கமல், ஆடவா் இரட்டையா் பிரிவில் சினேஹித் சுரவஜ்ஜுலாவுடன் இணைந்து விளையாட உள்ளாா். இந்த ஜோடிக்கு வைல்டு காா்டு வழங்கப்பட்டுள்ளது. ஆடவா் பிரிவில் 2-ஆவது ஜோடியாக சத்யன் ஞானசேகரன், ஹா்மீத் தேசாய் ஜோடியும் வைல்டு காா்டு பெற்றுள்ளது.
கலப்பு இரட்டையா் பிரிவில் சத்யன் ஞானசேகரன், ஸ்ரீஜா அகுலா ஜோடியும், மனிகா பத்ரா- மானவ் தாக்கா் ஜோடியும் வைல்டு காா்டை பெற்றுள்ளன. மகளிா் இரட்டையா் பிரிவில் ஸ்ரீஜா அகுலா, ஸ்வஸ்திகா கோஷ் ஜோடியும், சிண்ட்ரெலா தாஸ்- சுஹானா ஜோடியும்
பெற்றுள்ளன.