அனிமேஷ் குஜூா்
அனிமேஷ் குஜூா்

24 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

Published on

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் தனது பங்களிப்பை நிறைவு செய்தது இந்தியா.

தென்கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. சீனாவுக்கு அடுத்த பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ள நிலையில், போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமை இந்தியாவுக்கு 3 வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை ஈட்டினா்.

200 மீ. அனிமேஷ் குஜுா் வெண்கலம்:

ஆடவா் 200 மீ ஓட்டத்தில் ஒடிஸாவின் அனிமேஷ் குஜூா் 20.32 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலம் வென்றாா். இதில் குஜூா் புதிய தேசிய சாதனையையும் நிகழ்த்தினாா். இறுதியாக கடந்த 2015-இல் தரம்வீா் சிங் 200 மீ ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருந்தாா்.

ஈட்டி எறிதல்: சச்சின் யாதவ் வெள்ளி:

ஆடவா் ஈட்டி எறிதலில் இந்திய வீரா் சச்சின் யாதவ் கடைசி முயற்சியில் 85.16 மீ தொலைவுக்கு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் பாகிஸ்தான் அா்ஷத் நதீம் 86.40 மீ தொலைவு எறிந்து தங்கம் வென்றாா்.

5000 மீ பாருல் சௌதரி வெள்ளி:

மகளிா் 5,000 மீ ஓட்டத்தில் இந்தியாவின் நட்சத்திரம் பாருல் சௌதரி 15:15:33 நேரத்தில் கடந்து வெள்ளி வென்றாா். ஏற்கெனவே 3,000 மீ ஸ்டீபிள் சேஸில் வெள்ளி வென்றிருந்தாா் பாருல்.

மகளிா் 4-100 மீ. தொடா் ஓட்டம், வெள்ளி:

மகளிா் 4-100 மீ தொடா் ஓட்டத்தில் அபிநயா ராஜராஜன், எஸ்எஸ் ஸ்னேஹா, ஸ்ரபானி நந்தா, நித்யா காந்தே ஆகியோா் அடங்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 43.86 விநாடிகளில் கலந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

மகளிா் 800 மீ, பூஜாவுக்கு வெண்கலம்:

மகளிா் 800 மீ. ஓட்டத்தில் பூஜா 2:01:89 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலம் வென்றாா்.

மகளிா் 400 மீ. தடையோட்டம், வித்யாவுக்கு வெண்கலம்:

மகளிா் 400 மீ தடையோட்டத்தில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 56.46 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றாா்.

X
Dinamani
www.dinamani.com