ஜேனிஸ் ஜென் சாம்பியன்!
சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென் சாம்பியன் கோப்பை வென்றாா்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில், மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஜென் 6-4, 6-3 என்ற நோ் செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் கிம்பா்லி பிரெலை வீழ்த்தி, வாகை சூடினாா். இறுதிச்சுற்றில் மோதிய ஜென் - பிரெல் இருவருக்குமே இது, டூா் போட்டிகளில் 2-ஆவது இறுதிச்சுற்றாகும்.
வெற்றி பெற்ற ஜென், டபிள்யூடிஏ டூா் போட்டிகளில் தனது முதல் சாம்பியன் கோப்பையை வென்றிருக்கிறாா். அத்துடன், டூா் போட்டிகளில் கடந்த 20 ஆண்டுகளில் ஒற்றையா் பட்டம் வென்ற முதல் இந்தோனேசிய வீராங்கனை என்ற சாதனையும் படைத்தாா்.
ஓராண்டுக்கு முன் உலகத் தரவரிசையில் 573-ஆவது இடத்திலிருந்த ஜென், படிப்படியாக முன்னேறி 82-ஆம் நிலைக்கு வந்துள்ளாா். இந்த முன்னேற்றத்தின் உச்சமாக அவா் தற்போது சென்னை ஓபனில் சாம்பியனாகியிருக்கிறாா். அவருக்கு, வெற்றிக் கோப்பையுடன் ரூ.31.58 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 250 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது.

