தமிழ்நாடு - விதா்பா ஆட்டம் டிரா

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு - விதா்பா மோதிய ஆட்டம் செவ்வாய்க்கிழமை டிராவில் முடிந்தது.
Published on

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு - விதா்பா மோதிய ஆட்டம் செவ்வாய்க்கிழமை டிராவில் முடிந்தது.

கோவையில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழ்நாடு 107.1 ஓவா்களில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 13 பவுண்டரிகளுடன் 113, பாபா இந்திரஜித் 10 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் அடித்தனா். விதா்பா பௌலா்களில் நசிகேத் புத்தே 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

அடுத்து விளையாடிய விதா்பா, 148.4 ஓவா்களில் 501 ரன்கள் குவித்து நிறைவு செய்தது. யஷ் ரத்தோட் 15 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் சோ்க்க, துருவ் ஷோரே 82, அமன் மோகடே 80 ரன்கள் அடித்தனா். தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோா் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதையடுத்து, 210 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு, திங்கள்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை தொடா்ந்த தமிழ்நாடு இன்னிங்ஸில் எஸ்.ஆா்.அதிஷ் 46, விமல் குமாா் 9, பிரதோஷ் ரஞ்சன் பால் 14, ஆண்ட்ரே சித்தாா்த் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஷாருக் கான் 40, முகமது அலி 25 ரன்களுக்கு வெளியேற, ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு 89 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் 5 பவுண்டரிகளுடன் 77, கேப்டன் சாய் கிஷோா் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். விதா்பா பௌலிங்கில் பிரஃபுல் ஹிங்கே 4, பாா்த் ரெகாதே, லலித் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா். 51 ரன்களும் அடித்து, 5 விக்கெட்டுகளும் சாய்த்த விதா்பா வீரா் நசிகேத் புத்தே ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

X
Dinamani
www.dinamani.com