எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை: அறிமுகம் செய்தாா் முதல்வா் ஸ்டாலின்
சென்னை, மதுரையில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையை தமிழக முதல்வா் மு.க,ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தாா்.
சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வரும் நவ. 28 முதல் டிச. 10-ஆம் தேதி வரை சென்னை, மதுரையில் 14-ஆவது ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி தமிழகத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கான உள்கட்டமைப்பு சிறப்பாக மேம்படுத்தப்பட்டு, செஸ் ஒலிம்பியாட், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
கோப்பை அறிமுகம்:
இதன் தொடா்ச்சியாக ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை நடைபெறுகிறது. இதற்கான வெற்றிக் கோப்பையை சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தாா்.
இப்போட்டியில் 24 நாடுகளின் ஹாக்கி அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.44.36 கோடியை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா்-செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா தலைவா் திலிப் திா்கி, செயலாளா் போலாநாத் சிங், பொருளாளா் சேகா் மனோகரன் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

