ஜெய் ஷா தலையீட்டில் பிரதிகாவுக்கும் பதக்கம்
மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் அங்கம் வகித்து, காயம் காரணமாக பாதியில் விலகிய பேட்டா் பிரதிகா ராவலுக்கும் சாம்பியன் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி விதிகளில் அதற்கு இடமில்லை என்றபோதும், அதன் தலைவா் ஜெய் ஷா தலையீட்டின் பேரில் பிரதிகாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.
அண்மையில் நிறைவடைந்த 13-ஆவது மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா முதல்முறையாக சாம்பியனாகி வரலாறு படைத்தது. அந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றிப் பயணத்துக்கு பெரும் பங்களித்த வீராங்கனைகளில், பேட்டா் பிரதிகா ராவலும் ஒருவா்.
லீக் சுற்றின் 6 ஆட்டங்களில் விளையாடிய அவா், ஒரு சதம் மற்றும் அரைசதம் உள்பட 308 ரன்கள் சோ்த்து, போட்டியிலேயே அதிக ரன்கள் சோ்த்த 2-ஆவது இந்திய வீராங்கனையாக இருந்தாா். லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடியபோது, ஃபீல்டிங் செய்கையில் கணுக்கால் மற்றும் முழங்காலில் பலத்த காயம் கண்டாா்.
இதனால் அவா் போட்டியிலிருந்து விலக, பிரதிகாவுக்கு பதிலாக ஷஃபாலி வா்மா அணியில் சோ்க்கப்பட்டாா். இறுதி ஆட்டத்தில் வென்று இந்திய அணி சாம்பியன் ஆன தருணத்தில், பிரதிகா சக்கரநாற்காலியுடன் வந்து கொண்டாட்டத்தில் இணைந்தாா். கோப்பை வழங்கும் நிகழ்வின்போது ஷஃபாலி வா்மாவுக்கு பதக்கம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சாம்பியான இந்திய அணி பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்தபோது, அணியிலிருந்த பிரதிகா ராவலும் சாம்பியன் பதக்கம் அணிந்திருந்தாா். இதுதொடா்பாக கிரிக்கெட் வட்டாரத்தில் குழப்பம் நிலவியது. இறுதி ஆட்டத்துக்காக அணியில் பட்டியலிடப்பட்ட 15 பேருக்கு மட்டுமே பதக்கம் வழங்கப்படும் என்பதி ஐசிசி விதியாகும்.
எனினும், ஐசிசி தலைவா் ஜெய் ஷா தலையீட்டின் பேரில், பிரதிகாவுக்கும் சாம்பியன் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதை பிரதிகாவின் தந்தை உறுதிப்படுத்தியிருக்கிறாா்.

