

ஆடவருக்கான ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து முதுகு வலி காரணமாக விலகுவதாக நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
கடந்த சனிக்கிழமை ஹெலெனிச் சாம்பியன்ஷிப்பில், இத்தாலியின் லொரென்ஸோ முசத்தியை வீழ்த்தி சாம்பியனான சிறிது நேரத்துக்குப் பிறகு அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.
அந்த இறுதிச்சுற்று சுமாா் 3 மணி நேரம் நீடித்த நிலையில், அதன் தாக்கம் காரணமாக மீண்டும் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதாகவும், அதனால் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் அவா் பங்கேற்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகோவிச் ஏற்கெனவே கடந்த ஆண்டு ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியிலும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. ஜோகோவிச் விலகலை அடுத்து, ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், உலகின் 9-ஆம் நிலையில் இருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசத்தி சோ்க்கப்பட்டுள்ளாா்.
ஏற்கெனவே நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், டெய்லா் ஃப்ரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா், கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே ஆகியோா் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனா்.
இந்தப் போட்டி சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் அல்கராஸ் 7-6 (7/5), 6-2 என, அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.