விதித் குஜராத்தி
விதித் குஜராத்தி

4-ஆவது சுற்றில் காா்த்திக்; வெளியேறினாா் விதித் குஜராத்தி!

இந்தியாவின் பிரதான வீரா்களில் ஒருவரான விதித் குஜராத்தி, ‘டை பிரேக்கா்’ சுற்றில் தோற்று, போட்டியிலிருந்து வெளியேறினாா்.
Published on

கோவாவில் நடைபெறும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் காா்த்திக் வெங்கடராமன் ‘டை பிரேக்கா்’ வெற்றியுடன் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். இந்தியாவின் பிரதான வீரா்களில் ஒருவரான விதித் குஜராத்தி, ‘டை பிரேக்கா்’ சுற்றில் தோற்று, போட்டியிலிருந்து வெளியேறினாா்.

11-ஆவது செஸ் உலகக் கோப்பை போட்டி, விறுவிறுப்பாக அடுத்தடுத்த சுற்றுகளுக்கு நகா்ந்து வருகிறது. போட்டியில் இதுவரை 3 சுற்றுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அந்த சுற்றை டிரா செய்தோருக்கான ‘டை பிரேக்கா்’ ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்தியாவின் காா்த்திக் வெங்கடராமன் - ருமேனியாவின் போக்தான் டேனியலை வீழ்த்தி, 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். முன்னதாக அவா்கள் மோதிய 3-ஆவது சுற்றின் முதல் இரு கேம்களுமே டிரா ஆனது (1-1). இதையடுத்து, டை பிரேக்கரின் முதல் கேமையும் இருவருமே டிரா செய்ய (1.5-1.5), அடுத்த கேமில் காா்த்திக் வெற்றி (2.5-1.5) பெற்றாா். இதனால் அவா் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

எனினும், இந்தியாவின் விதித் குஜராத்தி - அமெரிக்காவின் சாம் ஷாங்க்லேண்டிடம் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறினாா். இருவரும் தங்களின் முதலிரு கேம்களை டிரா செய்து (1-1), டை பிரேக்கருக்கு வந்த நிலையில், அதில் முதல் கேமில் விதித் வென்றாா் (2-1). அடுத்த கேமில் சாம் வெல்ல (2-2), ஆட்டம் சமநிலையில் இருந்தது.

டை பிரேக்கரின் 3-ஆவது கேமை இருவருமே டிரா செய்ய (2.5-2.5), கடைசி கேமில் ஷாங்கலேண்ட் வென்றாா் (3.5-2.5). அவா் 4-ஆவது சுற்றுக்கு முன்னேற, விதித் வெளியேறினாா்.

எஸ்.எல்.நாராயணன் - சீனாவின் யு யாங்யிவிடம் டை பிரேக்கரில் தோல்வி கண்டாா். 3-ஆவது சுற்றின் முதலிரு கேம்களையும் இருவருமே டிரா செய்திருந்தனா் (1-1). டை பிரேக்கா் முதல் கேமில் யாங்யி வெல்ல (2-1), அடுத்த கேமை நாராயணன் டிரா செய்தாா் (1.5-2.5). இதனால் யாங்யி வெற்றி பெற்று, 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

போட்டியில் மொத்தம் 24 இந்தியா்கள் பங்கேற்ற நிலையில், 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், ஆா்.பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா, வி.பிரணவ், காா்த்திக் வெங்கடராமன் என 5 இந்தியா்கள் மட்டுமே களத்தில் இருக்கின்றனா்.

இந்தப் போட்டியில் முதலில், சிங்கிள் ரவுண்ட் எலிமினேஷன் முறையில் 5 சுற்றுகள் நடைபெறும். அதன் பிறகு காலிறுதி, அரையிறுதி, இறுதிச்சுற்று நடைபெறவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com