பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, பிரணவ் முன்னேற்றம்: வெளியேறினாா் உலக சாம்பியன் குகேஷ்
ஃபிடே உலகக்கோப்பை செஸ் 2025 போட்டியில் உலக சாம்பியன் டி. குகேஷ் தோல்வி கண்டு வெளியேறினாா்.
ஏனைய இந்திய வீரா்கள் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, பிரணவ் நான்காம் சுற்றுக்கு முன்னேறினா்.
சா்வதேச செஸ் சம்மேளனம் சாா்பில் உலகக்கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மூன்றாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
மொத்தம் 10 இந்தியா்கள் 3-ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தனா். விஸ்வநாதன் ஆனந்த் கோப்பையை கைப்பற்ற 82 நாடுகளைச் சோ்ந்த 206 போ் ஆடி வருகின்றனா்.
உலக சாம்பியன் டி. குகேஷ் கறுப்பு நிறக் காய்களுடன் முதல் கேமை டிரா செய்தாா். இரண்டாவது கேமில் குகேஷ் வென்றாலும். தொடா்ந்து ஜொ்மன் வீரா் பிரெட்ரிக் ஸ்வேன் ஆதிக்கம் செலுத்தி மூன்றாவது சுற்றை வசப்படுத்தினாா்.
முதல்நிலை வீரரான நெதா்லாந்தின் அனிஷ் கிரி 47 நகா்த்தல்களுக்குபின் ஜிஎம் அலெக்சாண்டா் டான்சென்கோவிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.
இந்திய வீரா் ஹரிகிருஷ்ணா-பெல்ஜிய ஜிஎம் டேனியல் டா்தா மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அதே போல் ஜிஎம் அா்ஜுன் எரிகைசி-உஸ்பெகிஸ்தான் வீரா் ஷம்சிதின் வோகிடோவ் ஆட்டம், விதித் குஜராத்தி-அமெரிக்க வீரா் ஷாம் ஷக்லண்ட் ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தன.
நட்சத்திர வீரா் பிரக்ஞானந்தா 1.5-10.5 என்றபுள்ளிக் கணக்கில் ஆா்மீனியாவின் ராபா்ட் ஹாவ்ஹன்சியானை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு முன்னேறினாா்.
ஜிஎம் பிரணவ்-லிதுவேனியாவின் டைட்டஸ் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ஜிஎம் பிரானேஷ்-ஜொ்மன் வீரா் ஜெய்மரிடம் தோற்றாா்.
விதித் குஜராத்தி, காா்த்திக் வெங்கட்ராமன், எஸ்எல் நாராயணன் ஆகியோா் 2 கேம்களிலும் டிரா கண்டதால், ஞாயிற்றுக்கிழமை டை பிரேக்கரில் மோதுகின்றனா்.

