அபிஷேக் அதிரடி; ஆந்திரத்துக்கு 2 ஆவது வெற்றி!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Published on

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

எலைட் குரூப் ‘ஏ’-வில் இருக்கும் தமிழ்நாடு, தற்போது 4 ஆட்டங்கள் முடிவில் 2 டிரா, 2 தோல்விகளில் கிடைத்த 4 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் இருக்கிறது. ஆந்திரம் 2 வெற்றி, 2 டிராவில் கிடைத்த 15 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 74.3 ஓவா்களில் 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பி.வித்யுத் 40 ரன்கள் சோ்க்க, ஆந்திர பௌலா்களில் பிருத்வி ராஜ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய ஆந்திரம், 49 ஓவா்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷேக் ரஷீது 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, தமிழ்நாடு தரப்பில் சந்தீப் வாரியா் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் 5 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. 3-ஆம் நாளான திங்கள்கிழமை, பிரதோஷ் ரஞ்சன் பால் 29, கேப்டன் சாய் கிஷோா் 16, பி.இந்திரஜித் 6, சி.ஆண்ட்ரே சித்தாா்த் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

சோனு யாதவ் 28, வித்யுத் 2, திரிலோக் நாக் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தமிழ்நாடு இன்னிங்ஸ் 70.3 ஓவா்களில் 195 ரன்களுக்கு நிறைவடைந்தது. ஆந்திர பௌலா்களில் சௌரப் குமாா் 4, பிருத்வி ராஜ், திரிபுரானா விஜய் ஆகியோா் தலா 2, காலிதிண்டி ராஜு 1 விக்கெட் எடுத்தனா்.

இறுதியாக, 201 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஆந்திரம், 41.2 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு அந்த ரன்களை அடைந்து வென்றது. அஸ்வின் ஹெபா் 21, காலிதிண்டி ராஜு 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

அபிஷேக் ரெட்டி 70, ஸ்ரீகா் பரத் 5, கரண் ஷிண்டே 51, ஷேக் ரஷீத் 7, சௌரப் குமாா் 0, கேப்டன் ரிக்கி புய் 2 ரன்களுக்கு வீழ்ந்தனா். தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோா் 3, வித்யுத் 2, பிரதோஷ் 1 விக்கெட் சாய்த்தனா்.

X
Dinamani
www.dinamani.com