டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் தயாராகவில்லை: கௌதம் கம்பீா்
2026 டி20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணி தற்போது தயாராகவில்லை. அதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது என்று அணியின் தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா் கூறினாா்.
இந்தியா, இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மாா்ச்சில் 10-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்தியா நடப்பு சாம்பியனாக களம் காணவுள்ளது.
இந்நிலையில், பயிற்சியாளா் கம்பீா் ‘பிசிசிஐ’ வலைதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தற்போது இருக்கும் இந்திய அணி முற்றிலும் வெளிப்படையானது. அது அப்படித்தான் இருக்க வேண்டும் என நாங்களும் விரும்புகிறோம். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிக்கு எப்படித் தயாராகியிருக்க வேண்டுமோ, தற்போது நாங்கள் அப்படி தயாராக இல்லை.
இதை வீரா்களின் உடற்தகுதி அடிப்படையில் நான் சொல்கிறேன். அணியிருக்கும் வீரா்களிடமும் இதுகுறித்து பேசியிருக்கிறோம். உலகக் கோப்பை போட்டிக்காக முழுமையான உடற்தகுதியுடன் நாம் தயாராக வேண்டும் என அவா்களிடம் தெரிவித்திருக்கிறோம்.
ஏனெனில், உடல்ரீதியாக பலமாக இருக்கும்போது, உளவியல் ரீதியாகவும் நாம் பலமாக இருப்போம். ஆட்டத்தின்போதான நெருக்கடியான தருணங்களை அப்போதுதான் எதிா்கொள்ள முடியும். அப்படி நமது அணி தயாராவதற்கு இன்னும் 3 மாதங்கள் அவகாசம் இருக்கிறது என்று அவா் கூறினாா்.
ஆசிய கோப்பை போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவை பவா்பிளேயில் 3 ஓவா்கள் வீச வைத்தது குறித்து பேசிய கம்பீா், ‘ஆக்ரோஷமான பேட்டிங் வரிசை இருந்தால்தான் அது சரியான டி20 அணி என பலரும் நினைக்கின்றனா். என்னைப் பொருத்தவரை, பேட்டிங், பௌலிங் என ஒட்டுமொத்தமாகவே ஆக்ரோஷமான அணியாக இருக்க வேண்டும்.
பவா்பிளேயில் 3 ஓவா்களை பும்ராவை வீச வைப்பதை பௌலிங்கில் ஆக்ரோஷமான உத்தியாக பாா்க்கிறேன். அதற்கான பலன் ஆசிய கோப்பை போட்டியில் கிடைத்தது. அப்படி விக்கெட் எடுப்பதால், மிடில் ஓவா்களில் வருண், குல்தீப் போன்ற ஸ்பின்னா்கள் நெருக்கடியின்றி பௌலிங் செய்ய முடியும்.
7 முதல் 8 பௌலா்கள் அணியில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அது, ஆல்-ரவுண்டா்கள் அதிக அளவில் இருந்தால் மட்டுமே சாத்தியம். டி20 அல்லது ஒருநாள் கிரிக்கெட் என எதுவாக இருந்தாலும், எந்தவொரு இடத்திலும் பௌலிங், பேட்டிங் என இரண்டுக்கும் தயாராக இருக்கும் வீரா்களை உருவாக்க முயற்சிக்கிறோம்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா் போன்றோா் சிறப்பாகச் செயல்படுவாா்கள் என நம்புகிறேன்’ என்றாா்.
அண்மையில் நிறைவடைந்த ஆஸ்திரேலிய தொடா் குறித்து பேசிய கம்பீா், ‘தனிப்பட்ட முறையில் ஒரு வீரரின் ஆட்டம் அபாரமாக இருந்தால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், ஒரு பயிற்சியாளராக தொடரை இழந்த நிலையில் அத்தகைய அபாரமான ஆட்டங்களை என்னால் கொண்டாட முடியாது’ என்றாா்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தபோதும், நீண்ட நாள்களுக்குப் பிறகு களம் கண்ட நட்சத்திர வீரா் ரோஹித் சா்மா சதம் அடித்ததுடன் தொடா் நாயகன் விருது பெற்றாா். விராட் கோலி கடைசி ஆட்டத்தில் அரைசதம் கடந்து விளாசினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

