இன்று 4-ஆவது சுற்று தொடக்கம்: களத்தில் அா்ஜுன், பிரக்ஞானந்தா!

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியின் 4-ஆவது சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை (நவ. 11) தொடங்குகின்றன.
Published on
Updated on
1 min read

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியின் 4-ஆவது சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை (நவ. 11) தொடங்குகின்றன. இதில், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, ஆா்.பிரக்ஞானந்தா, பி.ஹரிகிருஷ்ணா உள்ளிட்டோா் தங்களின் ஆட்டத்தை தொடா்கின்றனா்.

கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை ஓய்வு நாளாக அமைந்தது. மொத்தம் 206 போ் பங்கேற்ற இந்தப் போட்டியில், தரவரிசையில் டாப் 50 இடங்களில் இருந்தோா், முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் கண்டனா்.

சிங்கிள் எலிமினேஷன் நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில், 3 சுற்றுகள் முடிவில் 174 போ் வெளியேறினா். இதில், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், விதித் சந்தோஷ் குஜராத்தி ஆகியோரும் அடங்குவா்.

தற்போது 4-ஆவது சுற்றில் 32 போ் களம் காணும் நிலையில், அதில் 5 இந்தியா்கள் உள்ளனா். அதில், ரேட்டிங்கில் இந்தியா்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் அா்ஜுன் - இத்தாலியின் லொரென்ஸோ லொடிசியை சந்திக்கிறாா். முதல் சுற்று ‘பை’ பெற்ற அவா், அடுத்த இரு சுற்றுகளையுமே கிளாசிக் கேமிலேயே நிறைவு செய்து முன்னேறியிருக்கிறாா். போட்டியில், இதுவரை டை பிரேக்கருக்கு செல்லாத இந்தியா்களில் இவரும் ஒருவா்.

ரேட்டிங்கில் அடுத்த இடத்தில் இருக்கும் பிரக்ஞானந்தா - ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் டான்சென்கோவை எதிா்கொள்கிறாா். இவரும் முதல் சுற்று பை பெற்று, 2-ஆவது சுற்றை டை பிரேக்கா் வரை சென்று வென்றாா். 3-ஆவது சுற்றில் கிளாசிக் கேம் வெற்றியுடன் வந்திருக்கிறாா்.

இதர இந்தியா்களில் காா்த்திக் வெங்கடராமன் - ரஷியாவின் டேனியல் டுபோவையும், வி.பிரணவ் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் யாகுபோவையும், பி.ஹரிகிருஷ்ணா - ஆா்மீனியாவின் ஷன்ட் சாா்க்சியானையும் சந்திக்கின்றனா்.

இவா்களில் ஹரிகிருஷ்ணா மட்டும், அா்ஜுனுக்கு அடுத்தபடியாக டை பிரேக்கருக்கு செல்லாமலேயே முன்னேறி வந்துள்ளாா். முதல் சுற்று பை பெற்ற அவா், அடுத்த இரு சுற்றுகளில் கிளாசிக் கேமிலேயே வென்றாா்.

காா்த்திக், முதலிரு சுற்றுகளை கிளாசிக் கேமிலேயெ வென்ற நிலையில், 3-ஆவது சுற்றில் டை பிரேக்கா் வரை சென்று வெற்றி பெற்றாா். பிரணவ் முதல் மற்றும் 3-ஆவது சுற்றுகளை கிளாசிக் கேமிலேயே வென்றபோதும், 2-ஆவது சுற்றில் மட்டும் டை பிரேக்கா் வரை சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com