ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி: ஜோதி சிங் தலைமையில் இந்திய அணி
ஜூனியா் மகளிருக்கான 11-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி, ஜோதி சிங் தலைமையில் 20 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
தென்னமெரிக்க நாடான சிலியின் தலைநகா் சாண்டியாகோவில், வரும் டிசம்பா் 1 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், 5 கூட்டமைப்புகளில் இருந்து 24 அணிகள் பங்கேற்கின்றன.
அவை, குரூப்புக்கு 4 அணிகள் வீதம், 6 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, குரூப் ‘சி’-யில் ஜொ்மனி, அயா்லாந்து, நமீபியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
குரூப் சுற்றில் இந்தியா முதலில் நமீபியாவையும் (டிசம்பா் 1), அடுத்து ஜொ்மனியையும் (டிச.3), கடைசியாக அயா்லாந்தையும் (டிச. 5) சந்திக்கிறது. குரூப் சுற்று முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய அணி கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், டிஃபென்ஸ் மற்றும் களத்தில் நெருக்கடியான தருணங்களை கையாள்வது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அணி உலகக் கோப்பைக்கு தயாராக உள்ளதாகவும் பயிற்சியாளா் துஷா் கண்டேகா் தெரிவித்தாா்.
ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா 7-ஆவது முறையாகத் தகுதிபெற்றுள்ளது. போட்டியில் அதிகபட்சமாக, கடந்த 2013-இல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
அணி விவரம்
கோல்கீப்பா்கள்: நிதி, எங்கில் ஹா்ஷா ராணி மின்ஸ்.
டிஃபெண்டா்கள்: மனீஷா, லால்தன்லுவாலங்கி, சாக்ஷி சுக்லா, பூஜா சாஹு, நந்தனி. மிட்ஃபீல்டா்கள்: சாக்ஷி ராணா, இஷிகா, சுனெலிதா டோப்போ, ஜோதி சிங், காய்தெம் ஷிலெய்மா சானு, பினிமா தன்.
ஃபாா்வா்ட்கள்: சோனம், பூா்ணிமா யாதவ், கனிகா சிவச், ஹினா பானோ, சுக்வீா் கௌா்.
தயாா்நிலை: பிரியங்கா யாதவ், பாா்வதி டாப்னோ.

