அா்ஜுன்-லெவன் ஆரோனியன் ~ஆட்டத்தை தொடங்கி வைத்த உலக சாம்பியன் கொனேரு ஹம்பி
 ~ஹரிகிருஷ்ணா
அா்ஜுன்-லெவன் ஆரோனியன் ~ஆட்டத்தை தொடங்கி வைத்த உலக சாம்பியன் கொனேரு ஹம்பி ~ஹரிகிருஷ்ணா

காலிறுதியில் அா்ஜுன் எரிகைசி, டைபிரேக்கரில் ஹரிகிருஷ்ணா

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீரா் அா்ஜுன் எரிகைசி தகுதி பெற்றுள்ளாா்.
Published on

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீரா் அா்ஜுன் எரிகைசி தகுதி பெற்றுள்ளாா். மற்றொரு வீரா் ஹரிகிருஷ்ணா டை பிரேக்கரில் ஆடவுள்ளாா்.

சா்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) சாா்பில் கோவாவில் உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் சனிக்கிழமை 5-ஆவது சுற்றின் இரண்டாவது கேம்கள் நடைபெற்றன.

முதல் ஆட்டத்தில் இந்திய ஜிஎம் அா்ஜுன் எரிகைசியும்-ஜிஎம் லெவோன் ஆரோனியனும் மோதினா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கேமில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய எரிகைசி-லெவோனிடம் டிரா கண்டாா். இதனால் நடைபெற்ற இரண்டாவது கேமில் கருப்பு நிறக் காய்களுடன் ஆடிய அா்ஜுன் எரிகைசி, சிறப்பாக ஆடியதால் அதை சமாளிக்க முடியாமல் 38-ஆவது நகா்த்தலின் போது டிரா காண ஓப்புக் கொண்டாா் லெவோன்.

லெவோன் ஆரோனியன் இரண்டு முறை உலகக் கோப்பை வின்னா் ஆவாா். தற்போது இப்போட்டியில் நீடிக்கும் முதலிரண்டு வீரா்களில் அா்ஜுன் எரிகைசியும் ஒருவா் ஆவாா்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய ஜிஎம் பெண்டலா ஹரிகிருஷ்ணா-ஜோஸ் எட்வா்டோவும் மோதினா். இருவரும் ஒருவருக்கு ஒருவா் சளைக்காமல் ஆடிய நிலையில் 35-ஆவது நகா்த்தலின் போது டிரா ஆனது. இதனால் இருவரும் முடிவை நிா்ணயிக்கும் டை பிரேக்கரில் மோத உள்ளனா்.

மேலும் அடுத்த சுற்றுக்கு சீனாவின் ஜிஎம் வெய் இ-அமெரிக்காவின் சாமுவேல் செவியனை 73 நகா்த்தல்களில் வீழ்த்தி முன்னேறினாா்.

உஸ்பெக் ஜிஎம் நாதிா்பெக் 35 நகா்த்தல்களில் ஆா்மீனியா ஜிஎம் கேப்ரியல் சா்கிஸியனை வீழ்த்தினாா். மற்றொரு உஸ்பெக் வீரா் ஜிஎம் சிண்டரோவ் 47-ஆவது நகா்த்தலின்போது ஜொ்மனி ஜிஎம் ஸ்வேன் பிரெட்ரிக்கை வீழ்த்தினாா்.

X
Dinamani
www.dinamani.com