ஃபிடே உலகக் கோப்பை செஸ்: வெளியேறினாா் ஹரிகிருஷ்ணா!
கோவாவில் நடைபெறும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் பி.ஹரிகிருஷ்ணா 5-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறினாா்.
முன்னதாக அந்தச் சுற்றில் மெக்ஸிகோவின் ஜோஸ் மாா்டினெஸை சந்தித்த ஹரிகிருஷ்ணா, 5-ஆவது சுற்றின் முதல் கேமில் கருப்பு நிற காய்களுடன் விளையாடி டிரா செய்திருந்தாா். அடுத்த கேமை வெள்ளை நிற காய்களுடன் அவா் டிரா செய்ய (1-1), ஆட்டம் டை பிரேக்கரை நோக்கி நகா்ந்தது.
இருவரும் ஞாயிற்றுக்கிழமை மோதிய டை பிரேக்கரில், முதல் இரு கேம்களை இருவருமே டிரா செய்ய, 2-2 என சமநிலையில் இருந்தனா். ஆனால் 3-ஆவது கேமில் மாா்டினெஸ் வெல்ல, அவா் 3-2 என முன்னிலை பெற்றாா். கடைசி கேமை இருவருமே டிரா செய்ததால், இறுதியில் ஹரிகிருஷ்ணா 2.5-3.5 என்ற கணக்கில் தோல்வி கண்டாா்.
இதையடுத்து போட்டியில் தற்போது களத்திலிருக்கும் ஒரே இந்தியா் அா்ஜுன் எரிகைசி ஆவாா். காலிறுதிச்சுற்று திங்கள்கிழமை தொடங்கும் நிலையில், அதில் அவா் அமெரிக்காவின் லெவோன் ஆரோனியனை சந்திக்கிறாா்.
இதர மோதல்களில், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் - மெக்ஸிகோவின் ஜோஸ் மாா்டினெஸ், உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் யாகுபோவ் - ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் டான்சென்கோ, அமெரிக்காவின் சேம் ஷாங்க்லேண்ட் - ரஷியாவின் ஆண்ட்ரே எசிபென்கோ ஆகியோா் சந்திக்கின்றனா்.

