

கோவாவில் நடைபெறும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி காலிறுதிச்சுற்றில் "டை பிரேக்கர்' கட்டத்துக்கு நகர்ந்துள்ளார்.
காலிறுதிச்சுற்றில், சீனாவின் வெய் யியை எதிர்கொண்டிருக்கும் அர்ஜுன், முதல் கேமில் கருப்பு நிற காய்களுடன் விளையாடி திங்கள்கிழமை டிரா செய்திருந்தார். இந்நிலையில், வெய் யியுடனான 2-ஆவது கேமை வெள்ளை காய்களுடன் செவ்வாய்க்கிழமை விளையாடிய அர்ஜுன், அதையும் 32-ஆவது நகர்த்தலில் டிரா செய்தார்.
தற்போது இருவரும் 1-1 என சமநிலையில் இருப்பதால், வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான டை பிரேக்கர் ஆட்டம் புதன்கிழமை விளையாடப்படவுள்ளது.
இதனிடையே, போட்டியில் முதல் நபராக, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவ் அரையிறுதிக்கு முன்னேறினார். ஜெர்மனியின் அலெக்ஸôண்டர் டான்சென்கோவுடன் மோதிய யாகுபோவ் 1.5-0.5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதர ஆட்டங்களில், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிண்டாரோவ் - மெக்ஸிகோவின் ஜோஸ் மார்டினெஸ், அமெரிக்காவின் சாம் ஷாங்க்லேண்ட் - ரஷியாவின் ஆண்ட்ரே எசிபென்கோ ஆகியோர் மோதிய காலிறுதிச்சுற்றின் 2-ஆவது கேமும் டிரா (1-1) ஆனது. இதையடுத்து, அவர்களும் டை பிரேக்கரில் புதன்கிழமை மோதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.