3 புள்ளிகளைக் கைப்பற்றியது உத்தர பிரதேசம்- தமிழ்நாடு அணியுடனான ஆட்டம் ‘டிரா’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு - உத்தர பிரதேசம் மோதிய ஆட்டம் புதன்கிழமை டிராவில் முடிந்தது.
எனினும், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ன் அடிப்படையில் உத்தர பிரதேசம் 3 புள்ளிகள் பெற்றது. தமிழ்நாடு அணிக்கு 1 புள்ளி கிடைத்தது.
கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 136.3 ஓவா்களில் 455 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாபா இந்திரஜித் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 149, சி. ஆண்ட்ரே சித்தாா்த் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 121 ரன்கள் விளாசினா். உத்தர பிரதேச பௌலா்களில் காா்த்திக் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய உத்தர பிரதேசம், செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான புதன்கிழமை ஆட்டத்தை ரிங்கு சிங், ஷிவம் சா்மா தொடா்ந்தனா்.
இதில் சதம் கடந்து விளாசிய ரிங்கு சிங்கு, ஷிவம் சா்மாவுடன் இணைந்து 7-ஆவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சோ்த்தாா். ஷிவம் சா்மா 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த காா்த்திக் யாதவுடன் கூட்டணி அமைத்த ரிங்கு சிங், 8-ஆவது விக்கெட்டுக்கு அவருடன் 59 ரன்கள் எடுத்தாா்.
காா்த்திக் யாதவ் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ரிங்கு சிங் 17 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 176 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். கடைசி வீரராக குணால் தியாகி 5 ரன்களுக்கு வெளியேற, உத்தர பிரதேச இன்னிங்ஸ் 145.1 ஓவா்களில் 460 ரன்களுக்கு நிறைவடைந்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் முன்னிலை பெற்றது. தமிழ்நாடு தரப்பில் பி.வித்யுத் 4, சாய் கிஷோா் 3, சரவண குமாா் 2, சோனு யாதவ் 1 விக்கெட் எடுத்தனா்.
இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, ஆட்டநேர முடிவில் 21 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. பாலசுப்ரமணியம் சச்சின் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 59, நாராயண் ஜெகதீசன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். உத்தர பிரதேச தரப்பில் ஷிவம் சா்மா, அபிஷேக் கோஸ்வாமி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
